வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்; அனைத்து கட்சி கூட்டம் நடத்த திருமா வலியுறுத்தல்

22


சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக ஒரு விரிவான விவாதத்தை நடத்த முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.


சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: தமிழகத்தில் சனாதனமயமாக்க பாஜ முயன்று வருகிறது. பாஜவிற்கு உறுதுணையாக தமிழகத்தில் உள்ள சில கட்சிகளும் உள்ளன. பாஜ தமிழக கட்சிகளுடன் இணைந்து நடமாட தொடங்கிய பின் ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளது. கவின் ஆணவ கொலை தொடர்பாக உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்.

தடுப்பு சட்டம்



தமிழக அரசு ஜாதி ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும்.
ஆணவ கொலைகள் தடுப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம். மாநில அரசுக்கு அந்த அதிகாரம் உண்டு. ஜாதி, மதத்தின் பெயரால் நடக்கும் ஆணவ கொலைகள் தேசிய அளவில் நடைபெறும் குற்ற நடவடிக்கைகள் ஆகும்.
ஆகவே மத்திய அரசு ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை இயற்றுவது தான் மிகவும் சரியானது.

கவனத்தில்...!



ஆனால் பாஜ அதில் ஆர்வம் காட்டவில்லை. நெல்லை ஆணவ படுகொலையை கண்டித்து பாஜ, ஆர்எஸ்எஸ் பேசவில்லை. ஏதும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆணவ படுகொலை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் என்று காத்திருக்காமல், மாநில அரசுக்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்திற்கான சட்டத்தை நிறைவேற்றி பிற மாநிலங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.



65 லட்சம் பேர்



பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பற்றி விவாதம் நடத்த கூட மத்திய அரசு தயாராக இல்லை. 2003ம் ஆண்டிற்கு பிறகு பதிவு செய்தவர்கள் குடியுரிமை ஆவணங்களை சமர்பிக்க தேர்தல் கமிஷன் சொல்கிறது. பீஹாரில் 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஜனநாயக நடவடிக்கை



ஒரு திட்டமிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கையை தேர்தல் கமிஷன் மூலம் மோடி அரசு மேற்கொண்டு வருவது மிகவும் ஆபத்தானது. இது தமிழகத்துக்கான நடவடிக்கையையும் விரைவில் மாறும். இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் இதனை நடைமுறைக்கு கொண்டு வர தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

அனைத்து கட்சி கூட்டம்



வட மாநிலத்தை சேர்ந்த 80 லட்சம் பேர் தமிழகத்தில் குடியேறி உள்ளனர். அவர்களை எல்லாம் இங்கே வாக்காளர்களை சேர்க்கும் முயற்சியும் அவர்களது செயல்திட்டத்தில் இருப்பதாக சொல்லபடுகிறது. எனவே இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு விரிவான விவாதத்தை நடத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று விசிக வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement