ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களை விரட்டி விரட்டிய தாக்கிய ராணுவ அதிகாரி; வீடியோ வெளியாகி பரபரப்பு

10

புதுடில்லி: ஸ்ரீநகர் விமான நிலையத்தில், லக்கேஜ் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஸ்பைஸ்ஜெட் ஊழியர் மீது ராணுவ அதிகாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட ஊழியர்களில் ஒருவருக்கு முதுகெலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இன்னொருவருக்கு தாடை உடைந்துள்ளது.


கடந்த, ஜூலை 26ம் தேதி ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வழக்கமான விமானப் போக்குவரத்து நடைமுறை படி, பயணிகளின் உடைமைகளை விமான நிலைய ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, டில்லி செல்லும் SG-386 விமானத்தின் ஏறும் வாயிலில், மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் நான்கு பேரை சரமாரியாக தாக்கினார்.
அதிகப்படியான லக்கேஜ் கொண்டு செல்வது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது. ராணுவ வீரர், விமான நிறுவன ஊழியர்களை விரட்டி விரட்டி தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்த சம்பவத்துக்கு ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பயணி மொத்தம் 16 கிலோ எடையுள்ள இரண்டு கேபின் பைகளை எடுத்துச் சென்றார். இது அனுமதி வழங்கப்பட்டுள்ள எடையை விட இரண்டு மடங்கு அதிகம். இது தொடர்பாக ஊழியர்கள் கேட்ட போது, பயணி கடுமையாக தாக்கியுள்ளார்.


இது விமானப் பாதுகாப்பு விதிமுறைகளின் கடுமையான மீறலாகும்.
காயமடைந்த அனைத்து பணியாளர்களும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது கடுமையான காயங்களுக்கு மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். ஒருவருக்கு முதுகெலும்பு முறிந்துள்ளது. இன்னொருவருக்கு தாடை உடைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தால் உள் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பயணியை பறக்கத் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கக் கோரியும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் டி.ஜி.சி.ஏ.,வுக்கு சிசிடிவி காட்சிகளுடன் விமான நிறுவனம் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement