மாயமான பெண் குழந்தை மீட்பு

சங்ககிரி: சங்ககிரி, தேவூர் அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா, 27. இவரது மகள் கவிஷா, 4. இவரை, கடந்த, 30ல் ராஜாவின் தாய் சாந்தி, வினோபாஜி நகரில் உள்ள அங்கன்வாடிக்கு அனுப்பினார்.


ஆனால் மாலையில் திரும்பி வரவில்லை. அங்கன்வாடிக்கு சென்று விசாரித்தபோது, கவிஷா வராதது தெரிந்தது. மறுநாள் ராஜா புகார்படி, தேவூர் போலீசார், சிறுமியை தேடினர்.
இந்நிலையில் குழந்தையை கடத்தியவர்கள், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்து, குமாரபாளையம் அருகே வெப்படை சாலை, மேட்டுக்கடையில் இருந்த முதியவரிடம் விட்டு சென்றனர். அவர், அந்த குழந்தையை குமாரபாளையம் போலீசில் ஒப்படைத்தார். அந்த போலீசார் கொடுத்த தகவல்படி, தேவூர் போலீசார் சென்று விசாரித்தபோது, காணாமல் போன ராஜாவின் குழந்தை கவிஷா என தெரிந்தது. இதனால் அந்த குழந்தையை மீட்டு, அவரது தாய் மீனாவிடம், நேற்று ஒப்படைத்தனர். குழந்தையை கடத்தியவர்கள் யார், அங்கு விட்டு சென்றது ஏன் என, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement