கிராமத்தினருக்கு போக்கு காட்டிய போக்குவரத்துக் கழகம்

மதுரை: 'டவுன்பஸ் வசதி துவங்கிய மறுநாளே நிறுத்தப்பட்டதால், அதிருப்தியடைந்த கு.பரமன்பட்டி, ஆண்டிபட்டி கிராமத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

மதுரை பேரையூர் அருகே உள்ள குப்பல்நத்தம் பட்டியைச் சேர்ந்த குக்கிராமங்களான கு.பரமன்பட்டி, ஆண்டிபட்டியில் 900 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாததால் பஸ்பயணத்திற்கு 3 கி.மீ., தொலைவில் உள்ள கட்டளை, சேடப்பட்டிக்குச் செல்ல வேண்டியுள்ளது.

எனவே உசிலம்பட்டி - பேரையூர் இடையிலான டவுன்பஸ்களை தங்கள் கிராமம் வழியாக சென்று வரும்படி பஸ்நிறுத்தம் வேண்டும் என கோரினர்.

உசிலம்பட்டி டெப்போவில் இருந்து ஆக.1 முதல் தினமும் 2 வேளை வந்து செல்லும் வகையில் பஸ்விட ஏற்பாடு செய்தனர். முதல்நாள் வந்த டவுன்பஸ் மறுவழித்தடத்தில் திரும்பாமல் அவ்வூர்களை தவிர்த்தன.

இதுபற்றி அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். அதன்பின் ஒருமுறைகூட வராமல் இக்கிராமங்களை தவிர்க்கின்றன. இதனால் பொதுமக்கள் நேற்று மதுரை கலெக்டர் அலுவலக குறைதீர்நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர். பரமன்பட்டியைச் சேர்ந்த நாகலிங்கம் கூறுகையில், ''எங்கள் பகுதி விவசாயிகள் உசிலம்பட்டி, பேரையூர் செல்ல பஸ்வசதி கேட்டதால் உடனே அனுமதித்தனர். ஆனால் ஒருவழிப் பாதை போல செல்லும் பஸ் திரும்ப இவ்வழியே வருவதில்லை. விவசாயிகள், மாணவர்கள் பாதிக்கப்படுகிறோம். எனவே கலெக்டரிடம் மனு கொடுத்தோம்'' என்றார்.

Advertisement