எஸ்.சி., பிரிவில் உள் இடஒதுக்கீடு அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

பெங்களூரு,: எஸ்.சி., பிரிவில் உள் இடஒதுக்கீடு தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கையை, மாநில அரசிடம் நேற்று ஓய்வு பெற்ற நீதிபதி நாக்மோகன்தாஸ் தலைமையிலான கமிஷன் சமர்ப்பித்தது.

கர்நாடகாவில் 2015ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவடைந்ததால், காங்கிரஸ் மேலிடம் உத்தரவின்படி, அறிக்கையை அரசு ரத்து செய்தது. புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது.

இதற்கிடையில், எஸ்.சி., பிரிவில் உள்ள 101 உட்பிரிவுகளுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மே 6ம் தேதி முதல் ஜூலை 6ம் தேதி வரை ஓய்வு பெற்ற நீதிபதி நாக்மோகன்தாஸ் தலைமையிலான கமிஷன் ஆய்வு நடத்தியது.

இந்த கணக்கெடுப்பில், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, அரசின் பல்வேறு துறைகள், வாரியங்கள், கார்ப்பரேஷன்களில் இருந்தும் புள்ளி விபரங்கள் எடுக்கப்பட்டன. மொத்தம் 1,765 பக்கங்கள் கொண்ட அறிக்கையை, முதல்வர் சித்தராமையாவிடம் நேற்று நாக்மோகன்தாஸ் வழங்கினார்.

பின் அவர் கூறுகையில், ''உள் இடஒதுக்கீட்டுக்கு கூடுதல் தரவுகள் தேவைப்பட்டன. எனவே, மாநில அரசு ஆய்வு செய்ய அனுமதி அளித்தது. இதற்காக 60 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. 27 லட்சம் குடும்பத்தினரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

' 'இது தொடர்பான அறிக்கை தயாரித்து உள்ளோம். இதை ஏற்பதும், ஏற்காததும் அரசின் கையில் உள்ளது,'' என்றார்.

முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''உள் இடஒதுக்கீடு அறிக்கையை கமிஷன் சமர்ப்பித்துள்ளது. இதில் என்ன உள்ளது என்று தெரியவில்லை.

' 'வரும் 7ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. அதில் தாக்கல் செய்து விவாதிப்போம்,'' என்றார்.

Advertisement