போலீசாரின் காவல் தெய்வமாக விளங்கும் பூதப்ப சுவாமி

நமக்கு ஏதேனும் பிரச்னை என்றால், போலீசாரிடம் செல்வோம். அவர்கள் நமது பிரச்னையை தீர்த்து வைப்பர் என, நம்புகிறோம். அதே போன்று போலீசாருக்கு பிரச்னை என்றால், அவர்களை காப்பாற்ற ஒரு கடவுள் இருக்கிறார். அவர், போலீசாரின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக ஐதீகம்.
கடலோர மாவட்டமான உத்தரகன்னடாவில் அழகான கடற்கரைகள், மலை பிரதேசங்கள் உள்ளன. புராதனமிக்க கோவில்களும் உள்ளன. இங்குள்ள வழிபாடுகள் சிறப்பானவை. இவற்றில் பூதப்ப சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலை பற்றி, பலருக்கும் தெரியாது. பல மர்மங்களையும், புதிர்களையும் தன்னுள்ளே அடக்கியுள்ளது.
தேங்காய் உருட்டுதல் உத்தரகன்னடா மாவட்டம், சித்தாபுராவில் பூதப்ப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் சிறப்பானது. குறிப்பாக போலீசாரை காப்பதாக ஐதீகம். சில போலீஸ் அதிகாரிகள் அவ்வப்போது இக்கோவிலுக்கு வருகின்றனர். சில வழக்குகள் கண்டுபிடிக்க முடியாமல் திணறடிக்கும். இத்தகைய வழக்குகள் வந்தால், பூதப்ப சுவாமி கோவிலுக்கு வந்து, வழக்கு விரைவில் முடிய வேண்டும் என போலீசார் பிரார்த்தனை செய்து, தேங்காயை உருட்டி விட வேண்டும்.
அப்படி உருட்டி விட்டால், எப்படிப்பட்ட சிக்கலான வழக்காக இருந்தாலும், சில நாட்களில் முடிவுக்கு வரும் என்பது, அவர்களின் நம்பிக்கையாகும். போலீசாருக்கு தலைவலியாக இருந்த பல வழக்குகள், பூதப்ப சுவாமி கருணையால் முடிவுக்கு வந்துள்ளன. இதனால் பூதப்ப சுவாமி மீது, போலீசாருக்கு பக்தி அதிகம்.
போலீசாரின் வழக்குகளை விரைவில் முடிக்க உதவுவதுடன் திருடர்கள், குற்றவாளிகளை பிடிக்கவும் உதவுவதாக நம்பப்படுகிறது. போலீசார், தங்களின் வேண்டுதல் நிறைவேறியவுடன், கோவிலுக்கு வந்து வெள்ளி கவசம் வழங்குவது உட்பட பல்வேறு காணிக்கைகள் செலுத்துகின்றனர்.
போலீசாருக்கும், பூதப்ப சுவாமிக்கும் இந்த அளவுக்கு பந்தம் ஏற்பட ஒரு கதை சொல்லப்படுகிறது. இதற்கு முன் பூதப்ப சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், போலீஸ் நிலையம் கட்டப்பட்டது.. இதை கட்டிய பின், அங்கு பணியாற்றிய போலீசாருக்கு, பல விதமான தொந்தரவுகள் ஏற்பட துவங்கின. சுற்றுப்பகுதிகளில் விபத்துகள், குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்தன. இதனால் போலீசார் நெருக்கடியில் சிக்கினர்.
அரசு குடியிருப்பு போலீஸ் நிலையம் மட்டுமின்றி, தாசில்தாருக்காக கட்டப்பட்ட அரசு குடியிருப்பும், பூதப்ப சுவாமி கோவில் எல்லைக்குள் இருந்தது. இந்த குடியிருப்புக்கு எந்த அதிகாரிகள் வந்தாலும், பலவிதமான பிரச்னைகளை அவர்கள் அனுபவித்தனர். நொந்து போன அதிகாரிகள், தங்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன்படி வேறு இடத்தில் தங்கும் வசதி செய்யப்பட்டது. இப்போதும் கோவில் எல்லையில் உள்ள தாசில்தார் குடியிருப்பு காலியாகத்தான் உள்ளது. அங்கும் பூதப்ப சுவாமியின் நடமாட்டம் உள்ளதாக, மக்கள் கருதுகின்றனர்.
இந்த சம்பவங்களுக்கு பின், கடவுளிடம் சென்று அருள்வாக்கு கேட்டனர். அப்போது, அந்த இடத்தில் போலீஸ் நிலையம் இருப்பதே, பிரச்னைக்கு காரணம் என, தெரியவந்தது. அதன்பின் போலீஸ் நிலையம் இடமாற்றப்பட்டது; போலீசாரின் பிரச்னைகளும் மாயமானது.
தங்கள் குடும்பத்திலோ, பணியிலோ ஏதாவது பிரச்னை என்றால், பூதப்ப சுவாமியிடம் சென்று பிரார்த்தனை செய்கின்றனர். சில நாட்களிலேயே பிரச்னைகள் சரியாகின்றன. சிக்கலான வழக்குகளும் முடிவுக்கு வருகின்றன. போலீசார் அனைவரும், பூதப்ப சுவாமியின் பக்தர்களாவர்.
சித்தாபுராவுக்கு எந்த தாசில்தார் வந்தாலும், பூதப்ப சுவாமியை தரிசித்து பூஜிக்கின்றனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு பின், கோவிலில் திருவிழா நடக்கிறது. இதை நடத்துவதும் போலீசாரே என்பது குறிப்பிடத்தக்கது. திருவிழாவில் அரசு அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். சித்தாபுராவின் காவல் தெய்வமாகவே பூதப்ப சுவாமி விளங்குகிறார்.
- நமது நிருபர் -
மேலும்
-
நாமகிரிப்பேட்டையில் விபரீதம்; 3 மகள்களை கொன்று தந்தை தற்கொலை
-
ஐகோர்ட் உத்தரவால் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்... ஒரு நாள் தள்ளிவைப்பு! முதல்வர் தலைமையில் இன்று மீண்டும் பேச்சு நடக்குமா?
-
சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்: சத்குரு
-
டில்லி செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது
-
பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் காலமானார்; திரையுலகம் கண்ணீர் அஞ்சலி
-
காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமிரக்க வேண்டும்; பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் பிரதமர் தீவிரம்