கோயில் பாதை ஆக்கிரமிப்பு; கடனை திருப்பி தராத போலீஸ் திண்டுக்கல் குறைதீர் கூட்டத்தில் முறையீடு
திண்டுக்கல்: கோயில் பாதை ஆக்கிரமிப்பு, கடனை திருப்பி தராத போலீஸ், காலி பணியிடத்தை நிரப்புங்க என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பலரும் முறையிட்டனர்.
கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 550 க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் நிவாரணம், 6 பேருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் தொழில் கடன் உதவி, ஒரு மாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிகளவில் பங்கேற்க செய்யும் வகையில் இணையதளம் வாயிலாக பெயர்ப் பதிவு செய்வதற்கான விழிப்புணர்வு கியூஆர் கோடு வழிமுறைகளை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி கலந்துகொண்டனர்.
பக்தர்கள் அவதி பாலகிருஷ்ணாபுரத்தை அடுத்த ஜம்புளியம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ஜம்புளியம்பட்டி பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகே உள்ள கிணறு, வண்டிப்பாதையை சிலர் ஆக்கிரமித்துவிட்டனர்.
இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
திண்டுக்கல் கவடக்காரத்தெருவை சேர்ந்த ஜெயலட்சுமி 85, கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் வசிக்கும் போலீஸ்காரர் ஒருவர் 2017 ல் என்னிடம் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை கடனாக பெற்றார்.
தற்போது வரை திருப்பி தரவில்லை. மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவிக்கிறேன். போலீஸ்காரரிடம் இருந்து கடன் தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
காலி பணியிடத்தை நிரப்புங்க அரசு ஊழியர் அய்க்கியப் பேரவையினர் அளித்த மனுவில்,'' மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் மே மாதத்தோடு ஓய்வு பெற்றார்.
தற்போது பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பொறுப்பு அதிகாரியாக செயல்படுகிறார்.
அவரால் இரு துறைகளை பாரக்க முடியவில்லை. இதனால் மாவட்ட அலுவலகம் பூட்டியே உள்ளது.
எனவே பொதுமக்கள் பயன்பற ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் காலி பணியிடத்தை நிரப்ப அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுமென கூறப் பட்டிருந்தது.