நாட்டை காக்கும் வீரர்களை பாருங்க... கிரிக்கெட்டில் பணிச்சுமையை மறந்துடுங்க * இந்திய அணிக்கு கவாஸ்கர் 'அட்வைஸ்'

லண்டன்: ''எல்லையில் கடும் குளிரிலும் ராணுவ வீரர்கள் நாட்டை காக்கின்றனர். இவர்களை போல நாட்டுக்காக விளையாடும் போது வலியை மறந்துவிட வேண்டும். இந்திய கிரிக்கெட் அகராதியில் இருந்து பணிச்சுமை என்ற வார்த்தையை நீக்க வேண்டும்,'' என கவாஸ்கர் தெரிவித்தார்.
இந்தியா-இங்கிலாந்து மோதிய டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆனது. இந்திய 'வேகப்புயல்' சிராஜ், 5 டெஸ்டிலும் முழுமையாக பங்கேற்றார். 185.3 ஓவர் பந்துவீசி, 23 விக்கெட் வீழ்த்தினார். ஓவலில் நடந்த கடைசி டெஸ்டில் துடிப்பாக செயல்பட்டு, வெற்றிக்கு கைகொடுத்தார். போட்டிகளில் 'பீல்டிங்' செய்தது, பயிற்சியில் பந்துவீசியது என அனைத்தையும் சேர்த்தால், சிராஜின் கடின உழைப்பு தெரிய வரும். அதே நேரம் பும்ரா முதுகுப்பகுதி காயம் காரணமாக 3 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார்.
காம்பிர் செய்த மாற்றம்
இந்திய அணியில் முன்பு சில நட்சத்திர வீரர்கள் தேவைப்பட்டால் பங்கேற்பர். சில போட்டிகளில் 'ரெஸ்ட்' எடுத்துக் கொள்வர். இந்த 'மெகா-ஸ்டார்' கலாசாரத்தை பயிற்சியாளர் காம்பிர், தேர்வுக்குழு தலைவர் அகார்கர் சேர்ந்து தகர்த்தனர். அனைத்து வீரர்களும் சமம் என்ற நிலையை உருவாக்கினர். இதன் காரணமாக இங்கிலாந்து தொடரில் அனைத்து இந்திய வீரர்களும் களமிறங்க தயாராக இருந்தனர். காயம் அடைந்த ரிஷாப் பன்ட் கூட துணிச்சலாக விளையாடினார். ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா அசராமல் பந்துவீசினர்.
பும்ரா விதிவிலக்கு
இது பற்றி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''நீங்கள் நாட்டுக்காக விளையாடும் போது உடல் வலியை மறந்துவிடுங்கள். எல்லையில் நாட்டை காக்கும் நம் ராணுவ வீரர்களை பாருங்கள். அவர்கள் எப்போதாவது குளிர்கிறது என புகார் சொல்லியிருக்கிறார்களா? மான்செஸ்டர் போட்டியில், வலது கால் பாத விரல் முறிவுடன் ரிஷாப் பன்ட் பேட் செய்ய களமிறங்கினார். இதே போன்ற அணுகுமுறையை தான் ஒவ்வொரு வீரர்களிடமும் எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவுக்காக விளையாடுவது மிகப் பெரும் கவுரவம். 140 கோடி மக்களின் பிரதிநிதிகளாக களமிறங்குகிறீர்கள். சிராஜிடம் இந்த உணர்வை பார்க்க முடிந்தது. முழு அர்ப்பணிப்புடன் பந்துவீசினார். பணிச்சுமையை பற்றி கண்டுகொள்ளவில்லை. 5 டெஸ்டில் பங்கேற்றார். சில நேரங்களில் 7-8 ஓவர் தொடர்ந்து பந்துவீசினார். இவர் பந்துவீச வேண்டுமென கேப்டன் விரும்பினார். இந்த நாடே எதிர்பார்த்தது. பணிச்சுமை என்ற வட்டத்திற்குள் சிக்கினால், நாட்டுக்காக விளையாட சிறந்த வீரர்களை களமிறக்க முடியாது. இந்திய கிரிக்கெட் அகராதியில் இருந்து பணிச்சுமை என்ற வார்த்தை நீக்கப்படும் என நம்புகிறேன். பணிச்சுமை என்பது உடல்ரீதியானது அல்ல; மன ரீதியானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். எனது விமர்சனம் பும்ரா மீது கிடையாது. அவர் காயம் காரணமாக தான் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க முடியவில்லை,''என்றார்.

'சீனியர்' நிலை என்ன
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட இளம் இந்திய படை அசத்தியது. இதனால் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா 38, கோலி 36, எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இருவரும் ஏற்கனவே 'டி-20', டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். அடுத்து நடக்க உள்ள நியூசிலாந்து, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர், 2027ல் உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) பங்கேற்பது சந்தேகம். தற்போதைய பி.சி.சி.ஐ., விதிமுறைப்படி உடற்தகுதியுடன் இருக்கும் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இதனால் ரோகித், கோலி சத்தமில்லாமல் ஒருநாள் போட்டியில் இருந்தும் விரைவில் ஓய்வு பெறலாம்.

பும்ரா எப்படி
முதுகுப்பகுதி காயத்தால் அவதிப்படும் பும்ரா, டெஸ்ட் போட்டிக்கு விடைகொடுக்கலாம். இது பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் ஒருவர் கூறுகையில்,''பும்ரா இல்லாமல் டெஸ்டில் வெல்ல முடியும் என்பதை சிராஜ், ஆகாஷ், பிரசித் நிரூபித்துள்ளனர். இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் 'சுழல்' எடுபடும். அப்போது வாஷிங்டன், குல்தீப், ஜடேஜா கைகொடுப்பர். பும்ரா தேவை அதிகம் இருக்காது. அடுத்து 'டி-20', 50 ஓவர் உலக கோப்பை நடக்க இருப்பதால், 'ஒயிட் பால்' கிரிக்கெட்டில் மட்டும் பும்ரா கவனம் செலுத்தலாம்,''என்றார்.

வாஷிங்டனுக்கு விருது
ஓவல் டெஸ்டில் வென்ற இந்திய வீரர்களுக்கு தலைமை பயிற்சியாளர் காம்பிர் வாழ்த்து தெரிவித்தார். இவர் கூறுகையில்,''டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்தது சிறந்த முடிவு. களத்தில் கடினமாக உழைத்து, முன்னேற்ற பாதையில் பயணிப்போம்,''என்றார். பின் இத்தொடரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய வீரருக்கான விருதை தமிழக 'ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தருக்கு ரவிந்திர ஜடேஜா வழங்கினார். 8 இன்னிங்சில் ஒரு சதம், அரைசதம் உட்பட 284 ரன் (சராசரி 47.33), 7 விக்கெட் வீழ்த்திய வாஷிங்டன் கூறுகையில்,''இங்கிலாந்தில் தொடர்ந்து 4 டெஸ்டில் விளையாடியது பெரிய விஷயம். இங்கு சிறப்பாக விளையாட விரும்பினேன். இதற்கேற்ப ஒவ்வொரு நாளும் அருமையாக செயல்பட்டோம்,''என்றார்.

தாயகம் திரும்பினர்
டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில் இந்திய வீரர்கள் தாயகம் திரும்புகின்றனர். சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஷர்துல் தாகூர் உள்ளிட்டோர் லண்டனில் இருந்து நேற்று துபாய் கிளம்பினர். துபாயில் இருந்து தனது சொந்த ஊரான ஐதராபாத் திரும்ப உள்ளார் சிராஜ்.

'மிஸ்டர்' கோபக்காரர்
ஆக்ரோஷமாக பந்துவீசிய சிராஜை, 'மிஸ்டர் ஆங்க்ரி' என இங்கிலாந்து வீரர்கள் செல்லமாக அழைத்துள்ளனர். இது பற்றி இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில்,''களத்தில் சிராஜ் கோபமாக இருப்பார். ஓவல் டெஸ்டின் 2வது நாள் பயிற்சியின் போது சிராஜை பார்த்த டக்கெட்,' மார்னிங், மிஸ்டர் ஆங்க்ரி. எப்படி இருக்கீங்க' என கேட்டார். உடனே சிராஜ் புன்னகைத்தார்,''என்றார்.

Advertisement