சின்னகாவனம் விநாயகர் கோவில் அகற்றம் சாலை விரிவாக்க பணிக்காக நடவடிக்கை

பொன்னேரி:பொன்னேரி அருகே சின்னகாவனம் பகுதியில், சாலை விரிவாக்க பணிகளுக்காக, அப்பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் கோவில் இடித்து அகற்றப்பட்டது.

மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்தை, பழவேற்காடு வழியாக சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க திட்டமிடப்பட்டது.

அதற்காக, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், பெருவாயல் பகுதியில் இருந்து ஏலியம்பேடு, சின்னகாவனம், மெதுார், திருப்பாலைவனம் வழியாக, பழவேற்காடு வரை உள்ள சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விரிவாக்க பணிகளுக்காக, பொன்னேரி அடுத்த சின்னகாவனம் பகுதியில், ஏராளமான வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. ஆனால், அங்கு சாலையோரம் இருந்த விநாயகர் கோவிலை அகற்ற, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இடிப்பதாக இருந்தால், மாற்று இடத்தில் கோவிலை நிறுவி, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், கோவிலை இடிப்பதற்காக, மூன்று பொக்லைன் இயந்திரங்களுடன், வருவாய் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் வந்திருந்தனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தகவல் அறிந்து சென்ற அப்பகுதி மக்கள், ஆடி மாத திருவிழா முடிய, இன்னும் 10 நாட்கள் இருப்பதால், அதுவரை அவகாசம் கேட்டனர். அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து, கோவிலை இடிக்கும் பணியை துவங்கினர்.

அப்போது, கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களை, போலீசார் கைது செய்து, அப்பகுதியில் இருந்த திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

தொடர்ந்து, கோவில் மூலவர் சிலையை பாதுகாப்பாக அகற்றிய பின், பொக்லைன் இயந்திரம் மூலம் கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

Advertisement