தேர்வாய்கண்டிகை சிப்காட் செல்ல மாற்று ஏற்பாடு...விமோசனம்: ரூ.21 கோடியில் கவரைப்பேட்டை சாலை விரிவாக்கம் ;பெரியபாளையம் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை

கும்மிடிப்பூண்டி:பெரியபாளையம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கவரைப்பேட்டை வழியாக தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகத்தை இணைக்கும் மற்றொரு சாலையை விரிவாக்கம் செய்ய, 21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவிற்கு உட்பட்ட தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகம், 2010ம் ஆண்டு, 1,127 ஏக்கர் பரப்பளவில் துவங்கப்பட்டது.

தற்போது, மிஷ்லின் டயர் தொழிற்சாலை, பிலிப்ஸ் கார்பன், பேட்டர் இந்தியா, சுந்தரம் க்ளேட்டன், வீல்ஸ் இந்தியா, பிரேக்ஸ் இந்தியா உட்பட, மொத்தம் 46 தொழிற்சாலைகள் அங்கு இயங்கி வருகின்றன. அவற்றில், 10,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு, கன்டெய்னர் லாரிகள் உட்பட, தினசரி 400க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இவை தவிர நுாற்றுக்கணக்கான கார், வேன், பேருந்துகளில், தொழிலாளர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

மேற்கண்ட அனைத்து வகை வாகனங்களும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து, தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகத்திற்கு வந்து செல்கின்றன. அந்த வாகனங்கள், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலையில் இருந்து கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம் வழியாக, தேர்வாய்கண்டிகை வரையிலான, 27.4 கி.மீ., சாலையை கடந்து வர வேண்டும்.

இடைப்பட்ட சாலையில், வாகன போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்யும் பகுதியாக பெரியபாளையம் உள்ளது.

பெரியபாளையம் பேருந்து நிலையம், அடுத்ததாக மூன்று சாலை சந்திப்பு, அதற்கு அடுத்து ஆரணி ஆற்று பாலம், இறுதியாக பவானி அம்மன் கோவில் என, அடுத்தடுத்து நான்கு பிடிகளில் இருந்து வாகனங்கள் விடுபட்டு செல்வது, வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.

இதனால், உரிய நேரத்தில் தொழிலாளர்கள் சென்று வர முடியவில்லை. மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை உரிய நேரத்தில் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெரியபாளையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து ஸ்தம்பிப்பு மற்றும் குண்டும் குழியுமான சாலையால், தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்சாலை நிர்வாகத்தினர், கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில், மாற்று சாலையை விரிவாக்கம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டையில் இருந்து சத்தியவேடு நோக்கி செல்லும் நான்கு வழிச்சாலையில், 12வது கி.மீ.,ல் பூவலம்பேடு சந்திப்பு அமைந்துள்ளது.

அங்கிருந்து, தேர்வாய்கண்டிகை சிப்காட் வரையிலான, 6.4 கி.மீ., சாலையை விரிவாக்கம் செய்ய, மாநில நெடுஞ்சாலை துறையினர் சார்பில், விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது பயன்பாட்டில் உள்ள, 3.75 மீட்டர் சாலையை, 10 மீட்டராக விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன் வாயிலாக, கும்மிடிப்பூண்டி மற்றும் மாநெல்லுார் சிப்காட் வளாகத்துடன், தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகத்தை இணைக்க வழி ஏற்படும்.

@quote@ பூவலம்பேடு சந்திப்பு பகுதியில் இருந்து, கவரைப்பேட்டை வழியாக தேர்வாய்கண்டிகை சிப்காட் செல்லும் சாலை விரிவாக்கப்பணிக்கு, விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது. வடகிழக்கு பருவ மழை முடிந்ததும், சாலை விரிவாக்க பணிகள் துவங்கப்பட்டு, துரித வேகத்தில் முடிக்கப்படும். - நெடுஞ்சாலை துறை பொறியாளர்.quote

@block_B@ இடையூறு இல்லா போக்குவரத்து

ஜனப்பன்சத்திரம் சந்திப்பில் இருந்து பெரியபாளையம் வழியாக தேர்வாய்கண்டிகை சிப்காட் செல்ல, 27.4 கி.மீ., துாரம் உள்ள நிலையில், ஜனப்பன்சத்திரம் சந்திப்பில் இருந்து கவரைப்பேட்டை, பூவலம்பேடு வழியாக தேர்வாய்கண்டிகை சிப்காட் செல்ல, 33.3 கி.மீ., துாரமாகும். பயண துாரம் 6 கி.மீ., கூடுதல் என்றாலும், போக்குவரத்து இடையூறு இன்றி, குறித்த நேரத்தில் வாகனங்கள் சென்று வர முடியும் என்பதால், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்சாலை நிர்வாகத்தினர் மத்தியில், பூவலம்பேடு - தேர்வாய்கண்டிகை சிப்காட் சாலை விரிவாக்கத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.block_B

Advertisement