அரசு பள்ளி முன் தேங்கிய கழிவுநீரால் சுற்றுச்சுவரில் ஏறி சென்ற மாணவர்கள்

பூந்தமல்லி:பூந்தமல்லி, மேல்மா நகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி முன் உள்ள சாலையில், குட்டை போல் கழிவுநீர் தேங்கியதால் மாணவ - மாணவியர் அவதிக்குள்ளாகினர்.

பூந்தமல்லி நகராட்சி மேல்மாநகரில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி உள்ளது. 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.

இப்பள்ளியை ஒட்டியுள்ள சாலையில், மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஆனால், ஆக்கிரமிப்பு காரணமாக இந்த கால்வாயின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மழைநீர் செல்ல வழியின்றி நீரோட்டம் தடைபட்டுள்ளது. மேலும், அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த கால்வாயில் விடப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், சாலையோர கால்வாயில் தண்ணீர் செல்ல வழியின்றி, பள்ளி முன் குட்டை போல் கழிவுநீர் தேங்கி நின்றது.

இதனால், நேற்று காலையில் மாணவர்கள், சாலையில் நடக்க வழியில்லாததால், சுற்றுச்சுவரில் ஏறி சென்று, பள்ளி வளாகத்தை அடைந்தனர். சுவர் ஏற முடியாத மாணவ - மாணவியர், கழிவுநீரில் செல்லும் அவலமும் இருந்தது. இதுகுறித்து அறிந்த பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்தினர், டேங்கர் லாரி மூலம், கழிவுநீரை உறிஞ்சு அகற்றினர்.

அப்பகுதி மக்கள் கூறியதாவது:

கால்வாய் வழித்தடம் ஆக்கிரமிப்பில் உள்ளதால், தண்ணீர் செல்ல வழியில்லை. இதனால், பள்ளி முன் குட்டைபோல் கழிவுநீர் தேங்கி நிற்பது தொடர்கதையாக உள்ளது. இதனால், ஒவ்வொரு மழைக்காலத்திலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

மாணவர்கள், அருகில் உள்ள குடியிருப்பு மக்களுக்கும தொற்று நோய் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்றி கால்வாயில் மழைநீர் செல்லும் வகையில், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement