ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதி கவிழ்ந்த மினி லாரி

மணலி: மணலி அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜ், 36; லாரி ஓட்டுநர். நேற்று மாலை, திருவொற்றியூர் - சாத்தாங்காடு சந்திப்பில் உள்ள, நிறுவனம் ஒன்றில் சரக்கு ஏற்றுவதற்காக மினி லாரியை ஓட்டிச் சென்றார்.
மாதவரத்தில் இருந்து மணலி விரைவு சாலை வழியாக சென்றபோது, சாத்தாங்காடு காவல் நிலையம் அருகே முன்னால் சென்ற வாகனம் திடீரென நிலைதடுமாறிஉள்ளது. அந்த வாகனத்தில் மோதாமல் இருக்க, நாகராஜ் இடது பக்கமாக லாரியை திருப்பியுள்ளார்.
இதில், நாகராஜின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, சாலை மைய தடுப்பு கற்களில் மோதி பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில், மினி லாரியின் முன் பக்கம் நொறுங்கியது. ஓட்டுநர் நாகராஜை, எண்ணுார் போக்குவரத்து எஸ்.ஐ., பேபி உள்ளிட்ட போலீசார் மீட்டனர்.
லேசான காயமடைந்த அவர், சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், கிரேன் உதவியுடன் மினி லாரியை அப்புறப் படுத்தினர்.