பசியில் புறாக்கள்,பதற்றத்தில் மும்பை...




புறாக்களுக்கு உணவு

மும்பை,தாதர் ரயில்வே நிலையம் அருகே உள்ள மக்கள் நெருக்கம் மிகுந்த ஒரு தெருவில், புறாக்கள் கூட்டமாக இருந்து உணவருந்தும் இடம் ஒன்று இருக்கிறது.

அந்த இடத்திற்கு பெயர் கபூதர் கானா

புறாக்களுக்கு உணவு வைக்கும், ஜைன் சமூதாயத்திற்கு பிரியப்பட்ட ,பாரம்பரியமான, பக்தி நிரம்பிய இடம் அது.

ஆனால் கடந்த வாரம், அந்த அமைதியான இடத்தில் கலகலப்பும்... போராட்டமும்... சலசலப்பும் ஏற்பட்டது.

மும்பை மாநகராட்சி திடீரென அந்த கபூதர் கானாவை மூடியது.

கட்டுக்கடங்காமல் இங்கு குவியும் புறாக்களின் எண்ணிக்கையால் புறாக்கள் பயணிக்கும் எல்லா பக்கமும் கிறிப்டோகாசிஸ்,ஹிஸ்டோபிளாமோயிஸ் என்ற புறாக்களால் மனிதர்களுக்கு பரவும் நோய்களை பரப்புகின்றன, இரண்டாவது கட்டிடங்களுக்கு பாதகம் ஏற்படுத்துகிறது,மூன்றாவது திடீர் திடீரென ரோடுகளில் பறப்பதால் போக்குவரத்து பிரச்னை ஏற்படுகிறது, மொத்தத்தில் சமூக நலம் பாதிக்கப்படுகிறது என்று கபூதர் கானாவை மூடியதற்கான காரணமாக மாநகராட்சி சொன்னது.

அதெல்லாம் முடியாது இது எங்கள் மத உரிமை,புறாக்களுக்கு உணவு வைப்பது பாவத்தை தவிர்க்கும் வழி,எங்களுக்கு மன நிறைவைதரும் இந்த புனித கடமையை நீண்ட காலமாக கடைப்பிடித்து வருகிறோம் தடுக்காதீர்கள் என்றனர்.

விளைவு வாக்குவாதம்,தள்ளு முள்ளு

ஒரு பக்கம் புறாக்களுக்கு உணவளிக்க ஆண்களும்,பெண்களும்,மறுபக்கம் அதைத்தடுக்க மாநகராட்சி அதிகாரிகளும்,போலீசாரும் என கபூதர்கானா கலவரகானாவாகியது.

புறாக்களுக்கு உணவளிப்பதை தடுக்கவில்லை நெரிசலான இந்த இடத்தில் வேண்டாம் ஊருக்கு வெளியே உங்கள் விருப்பத்தை கடமையை நிறைவேற்றுங்கள் என்று சொன்னதை ஏற்கவில்லை.

கடந்த வாரம் ஆரம்பித்த இந்த பிரச்னை இன்று வரை தொடர்கிறது,கம்பு தட்டிகளால் மூடிய இடத்தில் கூடி அதைப்பிரித்து உணவு போடுவதும் அவர்களை வெளியேற்றி மாநகராட்சி மீண்டும் அந்த இடத்தை மூடுவதுமாக நிலவரம் கலவரம் குறையாமல் செல்கிறது.

ஒரு பக்கம் பக்தியும், மனஅமைதியும் தேடும் மக்கள்.இன்னொரு பக்கம் சுகாதாரமும், பொதுநலனும் பேணவேண்டிய நிர்வாகம்.

உணர்வுகளுக்கும், நகரத்தின் நலனுக்கும் இடைப்பட்ட பாலமாக சமூக அமைப்புகள் நடந்து கொண்டால் எல்லா பிரச்னைக்கும் தீர்வாக அமையும்.

-எல்.முருகராஜ்

Advertisement