மணக்குள விநாயகர் கல்லுாரி பட்டமளிப்பு விழா

புதுச்சேரி : புதுச்சேரி, கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், டிரஸ்டி நிலா பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் ஆண்டு அறிக்கை வாசித்தார்.

புதுச்சேரி பல்கலைக் கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபு, மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், தொழில்நுட்ப மாற்றங்கள் வேகமாக வளர்ந்து வரும் காலத்தில், பட்டதாரிகள் ஒரு புதிய யுகத்தின் தொடக்கத்தில் இருக்கின்றனர். செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுமை என்பது உலகை வடிவமைக்கும் முக்கிய சக்திகள்.

ஏ.ஐ., பலம் மனித நுண்ணறிவை மீறுவதில் இல்லை, அதை மேம்படுத்துவதில் உள்ளது. தொழில்நுட்பத்தை எதிரியாக அல்ல, உங்கள் நண்பனாகக் காணுங்கள். புதிய திறன்களை கற்றுக்கொண்டு, பலதுறை ஞானத்துடன் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, மருத்துவம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என்றார்.

இதில், பல்கலைக்கழகம் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற 22 மாணவிகளுக்கு கல்லுாரி சார்பாக 12 கிராம் தங்கம் மற்றும் 450 கிராம் வெள்ளி பதக்கங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இளங்கலை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறை, கணிப்பொறியியல் துறை, தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இயந்திரவியல் துறை, முதுகலை மேலாண்மை துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை, கணிப்பொறியியல் துறை போன்ற துறைகளை சேர்ந்த 512 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள், கல்லுாரி தேர்வு கட்டுப்பாட்டாளர், இயந்திரவியல் துறை தலைவர் ராஜாராம், மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன் செய்திருந்தனர்.

Advertisement