குத்துச்சண்டை கூட்டமைப்பின் அதிகாரியின் அவமானகரமான நடத்தை; மனம் நொந்து உண்மையை உடைத்த வீராங்கனை லவ்லினா

புதுடில்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா, இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநரும் இடைக்காலக் குழு உறுப்பினருமான கர்னல் அருண் மாலிக் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
உலக சாம்பியனும் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது பெற்றவருமான லவ்லினா குத்துச்சண்டை கூட்டமைப்பின் அதிகாரி அருண் மாலிக் தனது சாதனைகளை இழிவுபடுத்தி, அவமானப்படுத்தியதாக கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மேலும் அவர் கூறியதாவது: என்னை மிகவும் காயப்படுத்தியது, மனச்சோர்வடையச் செய்தது, பெண் வீரர்களாகிய நாம் உண்மையிலேயே பெறும் மரியாதை மற்றும் கண்ணியத்தை கேள்விக்குள்ளாக்கியது, என்றார்.
இந்த குற்றச்சாட்டுகளை, குத்துச்சண்டை கூட்டமைப்பின் அதிகாரி அருண் மாலிக் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கூட்டமைப்பு விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கிறது. அதே நேரத்தில் நியாயம் வெளிப்படை தன்மை மற்றும் சம வாய்ப்பை நிலை நிறுத்துகிறது.
லோவ்லினாவின்சாதனைகள், குறிப்பாக அவரது ஒலிம்பிக் வெண்கலம் குறித்து மிகுந்த பெருமை கொள்கிறோம். சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நான் மரியாதையுடனும் திட்டவட்டமாகவும் மறுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஆனாலும், லவ்லினா, தனது புகாரை விளையாட்டு அமைச்சர் மன்சுக் மண்டவியா, இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் ஹரி ரஞ்சன் ராவ் ஆகியோருக்கு அனுப்பினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழுவில் டாப்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி நச்சதர் சிங் ஜோஹல், டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் மற்றும் ஐஓஏவின் தடகள ஆணையத்தின் துணைத் தலைவர் ஷரத் கமல் மற்றும் ஒரு பெண் வழக்கறிஞர் ஆகியோர் அடங்குவர். ஒரு மாதம் கடந்தும், அந்தக் குழு இன்னும் அதன் முடிவுகளை வெளியிடவில்லை.
யார் இந்த லவ்லினா?
இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கோலாகாட் நகரத்தைச் சேர்ந்த பெண் குத்துச் சண்டை வீராங்கனை லவ்லினா.
இவர், ஒரு இந்திய பெண் குத்துச்சண்டை வீராங்கனை. இவர் 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் 2020ம் ஆண்டில் அர்ஜுனா விருது வென்றார்.
இவர் 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில் பெண்கள் பிரிவில் ஜெர்மனி வீராங்கனை நாடின் அபெர்ட்ஸ் மற்றும் தைவான் நாட்டின் சிங்கை வென்று பதக்கப் பட்டியலில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

