உத்தராகண்ட் வெள்ளத்தில் 70 பேர் மீட்பு; 50 பேர் மாயம்: ராணுவம்

டேராடூன்: திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் உத்தரகாசியில் மீட்புப் பணிகள் இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்த நிலையில், இதுவரை 70 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டம் தாராலி கிராமத்தில் ஆகஸ்ட் 5 அன்று பகல் 1:45 மணிக்கு திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், மலை உச்சியில் இருந்து சேறு, சகதியுடன் கரை புரண்டு வந்த வெள்ளம் குறுக்கே இருந்த வீடுகள், ஹோட்டல்கள், விடுதிகள், கட்டடங்கள் என அனைத்தையும் வாரி சுருட்டி சென்றது.இதில் ஏராளமான கட்டடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதனால், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காட்டாற்று வெள்ளத்தில் சேதமடைந்த பகுதிகளில் 3வது நாளாக மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியும் இந்த சம்பவத்தைக் கவனத்தில் கொண்டு உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பேசினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் உடனுக்குடன் செய்யுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.


வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவித்த 65 பேர் இன்று இங்கிருந்து 432 கி.மீ தொலைவில் உள்ள மாட்லி நகரத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீட்பு பணிகள் மூன்றாவது நாளாகத் தொடரும் நிலையில், இதுவரை 70 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement