வீணாக கடலுக்கு பாயும் காவிரி நீர் கடைமடை ஏரிகளுக்கு சென்றடையாத அவலம்

தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு, காவிரி, கொள்ளிடம் ஆறுகள் வாயிலாக பல டி.எம்.சி., நீர் வீணாக கடலில் கலந்து வரும் நிலையில், கல்லணை கால்வாய் வழியாக கடைமடை ஏரி, குளங்களுக்கு தண்ணீர் சென்றடையாத அவலம் நீடிக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகா மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா போன்றவை வறட்சி பகுதியாக இருந்த பிரிட்டிஷ் ஆட்சியில், ராணுவ பொறியாளர் கர்னல் டபிள்யு.எம்.எல்லிஸ், கல்லணை கால்வாயை செயற்கையாக வடிவமைத்தார்.
கல்லணை தலைப்பில் துவங்கி, புதுக்கோட்டை மாவட்டம், மும்பாலை வரை, 149 கி.மீ., துாரத்திற்கு இந்த கல்லணை ஆற்றில், 'ஏ' கால்வாயில் இருந்து 'பி, சி, டி, இ' என, 337 கிளை வாய்க்கால்கள் மொத்தம் 1,232 கி.மீ., நீளம் உள்ளன.
செயற்கையாக உருவாக்கப்பட்ட கல்லணை கால்வாயில் கழிவுநீரும், காட்டாற்று தண்ணீரும் கலக்காத வகையில், ஆற்றின் குறுக்கே 'சைபன்' எனப்படும் சுரங்கங்கள், 'சூப்பர் பேஸேஜ்' எனப்படும் மேல்நிலை கால்வாய்கள், பெருவெள்ள காலங்களில் காட்டாற்று தண்ணீரை உள்வாங்கி வெளியேற்ற, 'அக்யுடக்ட்' எனப்படும் கால்வாய் சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தண்ணீரின் விசையை சீராக வைத்திருக்க, 505 இடங்களில், 'டிராப்' எனப்படும் நீரொழுங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லணை கால்வாய் மூலம், 2.21 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும், 694 ஏரி, குளங்களும் பயன் பெறுகின்றன.
இதில், ஏரி குளங்களுக்கு தண்ணீர் செல்வது சங்கிலி தொடர் போன்றது. தற்போது வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளாலும், துார்ந்து போனதாலும், பல ஏரிகள் தண்ணீர் செல்லாமல் வறண்டும், குறைந்த அளவிலான தண்ணீரோடும் உள்ளன. இதனால், ஏரி பாசனத்தை நம்பியுள்ள திருவோணம், ஊராணிபுரம் மற்றும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் போன்ற கடைமடை பகுதி விவசாயிகள், விவசாயம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கீழ்குமுழி உடைந்தது மேற்பனைக்காடு ஆற்றில் இருந்து வீரக்குடி 'பி' பிரிவு கிளை வாய்க்கால் மூலம் ரெட்டவயல், மணக்காடு பகுதிகளுக்கு செல்லும் தண்ணீர், ஏரிகளுக்கு சென்று பாசனத்திற்காக பயன்படுகிறது. ஆனால், வீரக்குடி வாய்க்காலில் தண்ணீர் பிரிக்கும் கீழ்குமுழி பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. விவசாயிகள் மனு கொடுத்தும் அதை சீரமைக்காததால், தண்ணீர் வீணாக செல்கிறது. நீர்வளத் துறையில் நிதி இல்லையென அதிகாரிகள் கூறியதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
விலைக்கு தண்ணீர் பாசன வாய்க்கால்களை முறையாக துார் வாராததாலும், ஆக்கிரமிப்புகளால் மறைந்து போனதாலும், ஏரி, குளங்களுக்கு தண்ணீர் சென்றடையாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பம்ப் செட் வைத்துள்ளவர்களிடம், ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் வீதம் கொடுத்து, தண்ணீர் வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.
@quote@ கண்டுகொள்வதே இல்லை காவிரி ஆற்றில் லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் சென்றாலும், ஏரிகளுக்கு தண்ணீர் வர, பல மாதங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில ஏரிகளில் மழை பெய்தால் தான் தண்ணீர் தேங்குகிறது. கல்லணை கால்வாய் மேம்பாட்டுக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டாலும், மெயின் வாய்க்காலும், ஆறுகளும் மட்டுமே புனரமைக்கப்பட்டுள்ளன. கிளை வாய்க்கால்களை கண்டுகொள்வதில்லை. - - கருப்பையா, மணக்காடு விவசாயிquote
@quote@ பணியிடங்கள் காலி திருவோணம் பகுதியில் உள்ள ஏரிகளும், குளங்களும் நிரம்பவில்லை. கிளை வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். பாசனதாரர்கள் சங்கம் இருந்தபோது, விவசாயிகள் ஒன்றிணைந்து நீர்நிலைகளை சீரமைத்தனர். தற்போது, அந்த சங்கமும் இல்லை. ஆறுகளை கண்காணிக்கும் 'லஸ்கர்' எனப்படும் கரை காவலர்கள் பணியிடங்களும் இல்லை. -- சின்னதுரை, தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கம்quote
@block_P@
திருச்சி மாவட்ட விவசாய சங்கத்தினர் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் 208 குளங்கள், தஞ்சை மாவட்டத்தில் கல்லணைக்கு கீழ் பகுதியில் 800க்கும் மேற்பட்ட குளங்கள், காவிரி நீரை பெற்று பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் உள்ளன. இவற்றால், திருச்சி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கரும், தஞ்சை மாவட்டத்தில் 16 லட்சம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. ஏரி, குளங்களுக்கான வரத்து வாய்க்கால்களை முறையாக துார் வாராததால், பெரும்பாலான குளங்களுக்கு காவிரி நீர் போய் சேரவில்லை.
காவிரி ஆற்றின் பாசன வாய்க்கால்களில் ஒன்றான மேட்டுகட்டளை வாய்க்கால் மூலம் செங்கிப்பட்டி வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், காவிரி ஆற்றை ஒட்டியுள்ள புங்கனுார், மலம்பட்டி, கொத்தமங்கலம், கே.கே.நகர், திருவெறும்பூர் பகுதிகளில் உள்ள குளங்களுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. இந்த ஆண்டு பாசன வாய்க்கால்களை துார் வார, தமிழக அரசு 150 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளது. ஆனால், அரசு பதிவேட்டில் உள்ளபடி அளவீடு செய்து, பாசன வாய்க்கால்கள் துார் வாரப்படுவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.block_P










மேலும்
-
ஆசிட் வீச்சால் பார்வை இழந்தவரின் சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் தர உத்தரவு
-
அமெரிக்க வரி விதிப்பு விவகாரம்; இன்று அமைச்சரவையை கூட்டுகிறார் பிரதமர் மோடி!
-
இந்திய பொருட்களின் இறக்குமதி நிறுத்தம்; அமேசான், வால்மார்ட் முடிவு
-
குற்றவாளிகளுடன் தொடர்பு: இன்ஸ்., மீது நடவடிக்கை
-
வன்கொடுமை சட்ட வழக்கு டி.எஸ்.பி., 'சஸ்பெண்ட்' உத்தரவுக்கு தடை
-
வீடு, கோவில்களில் வரலட்சுமி விரதம் கோலாகலம்; கணவரின் ஆயுள் வேண்டி பெண்கள் வழிபாடு