வன்கொடுமை சட்ட வழக்கு டி.எஸ்.பி., 'சஸ்பெண்ட்' உத்தரவுக்கு தடை

சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத டி.எஸ்.பி.,யை, 'சஸ்பெண்ட்' செய்யும்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வானுார் பகுதியில் உள்ள நிலப் பிரச்னையில், பட்டி யலின சமுதாயத்தை சேர்ந்த செந்தாமரையை, மாற்று சமுதாயத்தை சேர்ந்த கேசவன் என்பவர், ஜாதி பெயரை சொல்லி திட்டி, கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, செந்தாமரை அளித்த புகாரி ன்படி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, கோட்டக்குப்பம் சரக டி.எஸ்.பி.,க்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தாமரை மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காத, டி.எஸ்.பி., சுனிலை சஸ்பெண்ட் செய்து, அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டிருந்தது. டி.எஸ்.பி., சுனில், தற்போது தேனி டி.எஸ்.பி.,யாக உள்ளார். இந்நிலையில், சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து, அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, சஸ்பெண்ட் செய்யும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Advertisement