பார்க்கிங் பிரச்னை; பிரபல ஹிந்தி நடிகையின் நெருங்கிய உறவினர் கொலை

புதுடில்லி: டில்லியில் வாகன பார்க்கிங் பிரச்னையில் பிரபல ஹிந்தி நடிகையின் நெருங்கிய உறவினர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஹிந்தி சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ஹூமா குரேஷி. இவரது நெருங்கிய உறவினர் ஆசிப் குரேஷி. நிஜாமுதின் பகுதியில் உள்ள இவரது வீட்டின் முன்பு, அண்டை வீட்டாரின் பைக் நிறுத்தப்பட்டுள்ளது. பைக்கை எடுக்குமாறு ஆசிப் கூறிய நிலையில், இருதரப்பினரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.


ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை முற்றி, கைகலப்பாக மாறிய நிலையில், ஆசிப் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


போலீசாரிடம் ஆசிப்பின் மனைவி சாய்னா குரேஷி கூறுகையில், "பார்க்கிங் பிரச்னையில் இதற்கு முன்பும் மோதல் ஏற்பட்டிருந்தது. வழக்கம் போல ஆசிப் பணியில் இருந்து வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பு பைக் நிறுத்தப்பட்டிருந்தது. அதனை அப்புறப்படுத்துமாறு அண்டை வீட்டாரிடம் கூறியுள்ளார். அவர்கள் பைக்கை எடுப்பதற்கு பதிலாக, வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆசிப்பை ஆயுதங்களால் தாக்கினர்," என்றார்.


நடிகை ஹூமா குரேஷி, கடந்த 2018ம் ஆண்டு வெளியான ரஜினியின் காலா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement