பார்லியில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைப்பு

14


புதுடில்லி: பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பார்லிமென்டின் இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம், ஆப்பரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி தொடர்ந்து அவையை முடக்கி வருகின்றனர்.


தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். உரிய ஆதாரங்களுடன் நேரில் சந்திக்குமாறு தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், பார்லிமென்ட் வழக்கம் போல இன்று கூடிய நிலையில், கேள்வி நேரத்தின் போது, பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், லோக்சபாவை பிற்பகல் வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

அதேபோல, ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சியினரின் இந்த செயலைக் கண்டித்த துணை தலைவர் ஹரிவன்ஷ், "தற்போதைய கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியின் காரணமாக, 56 மணி நேரம் 49 நிமிடங்களை நாம் இழந்து விட்டோம்," என்று கூறினார். தொடர்ந்து, ராஜ்யசபாவும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement