பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு; நீதிபதி முன் ராமதாஸ் ஆஜராக மாட்டார்

15

சென்னை: ''ராமதாஸ், அன்புமணி இருவரும் இன்று மாலை 5.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆக வேண்டும்,'' என்று ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். பா.ம.க., பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டார். ஆனால், ராமதாஸ் நீதிமன்றத்துக்கு வர மாட்டார் என அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆக., 17 ல் நடக்கும் என ராமதாஸ் அறிவித்துள்ளார். போட்டிக்கு, ஆக.,9ல் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பும் அறிவித்துள்ளது.


அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு ராமதாஸ் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று (ஆகஸ்ட் 08) ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:


இந்த விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5:30 மணிக்கு ராமதாஸ், அன்புமணி இருவரும் எனது அறைக்கு வர வேண்டும். உடனே ராமதாஸை கிளம்ப சொல்லுங்கள், இது எனது வேண்டுகோள். அனைவரின் நலனுக்காகவும், பா.ம.க., நலன் கருதியும், இருவரிடம் நானே பேச்சுவார்த்தை நடத்த போகிறேன்.

இருவரிடமும் பேசும் போது கட்சிக்காரர்கள், வழக்கறிஞர்கள் யாரும் உடன் இருக்க கூடாது. நீதிமன்ற வேலை நேரம் முடிந்ததும், இருவரும் எனது அறைக்கு வர வேண்டும்.

இவ்வாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.


இந்நிலையில், ராமதாஸ் நீதிபதி முன்பு ஆஜராக மாட்டார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், ராமதாஸ் நீதிமன்றத்துக்கு வர இயலவில்லை என நீதிபதியிடம் கடிதம் கொடுக்க ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement