எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஒரு ஜாதிக்குள் சுருக்க முடியாது; திருமாவளவன்

28

திருச்சி: "எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் என்னிடம் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஒரு ஜாதிக்குள் சுருக்க முடியாது," என்று விசிக எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


எம்ஜிஆர் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், 'அரசியலில் இருந்து திருமாவளவன் காணாமல் போய் விடுவார்,' என்று எச்சரித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.


அவர் கூறியதாவது; 50, 60 ஆண்டுகளாக தமிழக அரசியல் எப்படி இயங்கி வந்தது, எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பது குறித்த பேச்சில் எம்ஜிஆரை குறிப்பிட்டேன். எம்ஜிஆர், ஜெயலலிதா மீது எனக்கு அதீத மதிப்புண்டு. அவர்களை பலமுறை மனம் திறந்து நான் பாராட்டியுள்ளேன். தமிழக அரசியல் எப்படி கருணாநிதியை மையப்படுத்தி, அவருக்கு எதிர்ப்பு அரசியலாக மாறியது என்பதை அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசினேன். அவ்வளவு தான். எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் என்னிடம் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஒரு ஜாதிக்குள் சுருக்க முடியாது, எனக் கூறினார்.


திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இருப்பதாக இபிஎஸ் கூறியது பற்றிய கேள்விக்கு; அது அவரது ஆசை. 8 மாத காலத்தில் மிகப்பெரிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்று இபிஎஸ் விரும்புகிறார். அது அவரது தனிப்பட்ட விருப்பம். திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இருக்கும். உறவை அல்லது கூட்டணியை சிதைப்பதாக இருக்குமா? என்பது தெரியவில்லை. என்றார்.

Advertisement