3 வந்தே பாரத் ரயில், மெட்ரோ ரயில் சேவையை பெங்களூருவில் துவக்கி வைத்தார் பிரதமர்

15

பெங்களூரு: பெங்களூரின் ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே மஞ்சள் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையையும், 3 வந்தே பாரத் ரயில் சேவையையும், பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.


கர்நாடகாவின் பெங்களூருவில் ராஷ்ட்ரீய வித்யாலயா சாலை எனும் ஆர்.வி.ரோடு முதல் தமிழகத்தின் ஓசூர் சாலையில் உள்ள பொம்மசந்திரா வரை மெட்ரோ பாதை அமைக்கும் பணிக்கு, 2016 ஜூன் 16ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.மொத்தம் 18.82 கி.மீ., துாரத்திற்கு அமையும் இந்த வழித்தடத்திற்காக 5,056 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. பல முறை இலக்கு நிர்ணயித்தும் எதுவும் நினைத்தபடி முடியாமல் போனது. இதனால் திட்ட செலவு 7,160 கோடி ரூபாயை கடந்தது.


இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே, ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவையை, இன்று காலை 11:45 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
அதற்கு முன், பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், பெங்களூரு - பெலகாவி; அமிர்தசரஸ் - ஸ்ரீமாதா வைஷ்ணோதேவி கத்ரி; அஜ்னி - புனே ஆகிய வழித்தடங்களில்,3 'வந்தே பாரத்' ரயில் சேவைகளையும் பிரதமர் துவக்கி வைத்தார். பிரதமர் துவக்கி வைத்த வந்தே பாரத் ரயிலானது, நாட்டின் 150வது வந்தே பாரத் ரயிலாகும். பின், ராகிகுட்டாவில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை, மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தார்.


எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஐ.ஐ.டி., ஆடிட்டோரியத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கெம்பாபுரா - ஜே.பி.நகர் 4வது பேஸ்; ஹொசஹள்ளி - கடபகெரே இடையிலான மெட்ரோ ரயில் பாதை பணிகளை துவக்கி வைத்தார். 44.65 கி.மீ., துார, இந்த வழித்தடம் 15,610 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.


ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா ரயில் சேவை இன்று துவங்குவதன் மூலம், பெங்களூரு மக்களின் ஒன்பது ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வருகிறது.


இதனால் மெட்ரோ தினசரி பயணியரின் எண்ணிக்கை 25 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் பங்கேற்க பெங்களூரு வந்த பிரதமர் மோடியை கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர் வரவேற்றனர்.

Advertisement