குப்பை பிரச்னை தீரணும்

தி ருப்பூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றுவதில் நிலவும் பிரச்னை காரணமாக பல இடங்களில் குப்பைகள் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், 17வது வார்டு பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள் கஞ்சம்பாளையம் பகுதியில் கொட்டி குவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதே வார்டில் ஜே.பி., நகர் மற்றும் சின்ன பொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் இடங்களில் குப்பைகளை இரவோடு இரவாக கொட்டிச் செல்லப்பட்டுள்ளது.

மேலும், கஞ்சம்பாளையத்தில் குவிந்து கிடந்த குப்பையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர்.

இது குறித்து, அப்பகுதி கவுன்சிலர் செழியன் (த.மா.கா.,) கூறியதாவது:

அந்தந்த வார்டு பகுதிக்குள் குப்பையை கொட்டுமாறு தெரிவிக்கப்பட்ட நிலையில் கஞ்சம்பாளையத்தில், 17வது வார்டு குப்பைகள் கொண்டு குவிக்கப்பட்டு வருகிறது. தற்போது 19வது வார்டிலிருந்து அடாவடியாக இங்கு குப்பையை கொண்டு வந்து கொட்டியுள்ளனர். குப்பையில் யாரோ விஷமிகள் தீயை வைத்துள்ளனர். வேறு பகுதியிலிருந்து இங்கு குப்பை கொண்டு வந்து கொட்டுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement