சுடுகாடு அருகில் குடியிருப்பு விசாரிக்கிறது சி.எம்.டி.ஏ.,

சென்னை : தண்டையார்பேட்டை சுடுகாடு அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு, சி.எம்.டி.ஏ., கடிதம் அனுப்பி உள்ளது.

தண்டையார்பேட்டையில், ஒரு தனியார் நிறுவனம் சார்பில், 1,044 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு, 2023ல் சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், இந்த குடியிருப்பு திட்டம், சுடுகாட்டிற்கு மிக அருகில் கட்டப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து, சமூக ஆர்வலர் ஒருவர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினார்.

இந்த புகார் மேல் நடவடிக்கைக்காக சி.எம்.டி.ஏ.,வுக்கு அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில், மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், சமீபத்தில் கடிதம் எழுதி உள்ளார்.

தண்டையார்பேட்டையில் கட்டப்படும் அடுக்குமாடி திட்டம், சுடுகாட்டில் இருந்து, 98 அடிக்குள் அமைந்துள்ளதா என்பதை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் வாயிலாக ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட பகுதியில் சுற்றுச்சூழல் பொறியாளர்கள் விரைவில் ஆய்வு செய்வர் என தெரியவந்துள்ளது.

Advertisement