'தாயுமானவர்' திட்டத்தில் பயனடையும் 71 ஆயிரம் கார்டுதாரர்! மக்கள் வீடு தேடி சென்று பொருள் வழங்குவது துவக்கம்

திருப்பூர், ஆக. 13-

திருப்பூர் மாவட்டத்தில், 71 ஆயிரத்து 371 கார்டுதாரர்கள், 'முதல்வரின் தாயுமானவர்' திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, மாதந்தோறும் ரேஷன் பொருட்கள், வீடு தேடிச் சென்று வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசு, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு, ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும், 'முதல்வரின் தாயுமானவர்' திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில், பொங்கலுார் ஒன்றியம், கொடுவாய் பகுதியில், கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் துவக்கி வைத்தனர். கூட்டுறவுத் துறை மண்டல இணை பதிவாளர் பிரபு உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில், முழு நேரம் 882, பகுதி நேரம், 353 என, மொத்தம் 1,235 ரேஷன்கடைகள் உள்ளன. 'முதல்வரின் தாயுமானவர்' திட்டத்தில், கூட்டுறவுத்துறை நடத்தும் கடைகளில், 68 ஆயிரத்து 926 பேர்; நுகர் பொருள் வாணிப கழக கடைகளில் 1,670; மகளிர் குழுக்கள் நடத்தும் கடைகளில், 775 பேர் என, மாவட்டத்தில் மொத்தம் 71 ஆயிரத்து 371 கார்டுதாரர்களுக்கு, வீடு தேடிச்சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

அவிநாசி தாலுகாவில் 6,275, தாராபுரம் - 12,773, காங்கயம் - 10,226, மடத்துக்குளம் - 3,547, பல்லடம் - 6,311, திருப்பூர் வடக்கு - 8,991, திருப்பூர் தெற்கு - 8,607, உடுமலை - 11,170, ஊத்துக்குளி - 3,471 பயனாளிகள், வீட்டிலேயே ரேஷன் பொருள் பெறுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மொத்த பயனாளிகளில், 70 ஆயிரத்து 36 பேர் முதியவர்கள், 1,335 பேர் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ரேஷன் பொருள் கொண்டுசெல்வதற்காக, மாவட்டம் முழுவதும் 1,135 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

குடிமைப்பொருள் வழங்கல் பிரிவினர் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில், 71 ஆயிரத்து 371 கார்டுதாரர்கள், முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, அந்தந்த மாதத்துக்கான ஒதுக்கீடு ரேஷன் பொருட்கள், வீடு தேடிச் சென்று வினியோகிக்கப்படும்.

விற்பனையாளர் மற்றும் அளவையாளர்கள், வாகனங்களில், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்பட அனைத்து உணவுப்பொருட்கள் மற்றும் எடை தராசு, பாயின்ட் ஆப் சேல் கருவி ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு, பயனாளிகளின் வீடு தேடிச் சென்று, பொருள் வினியோகிக்க உள்ளனர்.

அருகே உள்ள ரேஷன் கடைகளை இணைத்து, ஊரக பகுதிகளில் 60 கார்டு; நகர பகுதிகளில் 70; மலைப்பகுதிகளில் 50 கார்டுதாரர்களுக்கான ரேஷன் பொருட்களை வாகனங்களில் கொண்டுசெல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கல் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement