மாணவிகளுக்கு தொல்லை ஆசிரியர் 'போக்சோ'வில் கைது

கடலுார் : வடலுாரில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடலுார் மாவட்டம், வடலுார் அடுத்த மருவாய் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆசிரியர் ஜெயராஜ், கடந்த மாதம் 7 ம் தேதி பணியில் சேர்ந்தார். இவர், பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக மாணவிகள், பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர்.

ஆசிரியர் ஜெயராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 1ம் தேதி பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டனர். வடலுார் போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து, பெற்றோர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து கடலுார் மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன்பேரில், ஆசிரியர் ஜெயராஜ், குறிஞ்சிப்பாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, குழந்தைகள் நலக்குழு தாமாக முன் வந்து நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஆசிரியர் ஜெயராஜை நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில் ஆசிரியர் ஜெயராஜை சஸ்பெண்ட் செய்து சி.இ.ஓ., எல்லப்பன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement