அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது: சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேச்சு

9


புதுடில்லி: ''அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது'' என சுதந்திர தின விழாவில் பேசுகையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: 140 கோடி மக்களின் கொண்டாட்டம் இந்த நன்னாள். ஆப்பரேஷன் சிந்தூர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். கோடிக்கணக்கான இதயங்களில் இன்று பெருமிதம் பொங்குகிறது.

சல்யூட்



அரசியலமைப்பு சட்டம் தான் இந்தியாவுக்கு ஒளிகாட்டும் விளக்கு. கடந்த 78 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்டம் தான் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது. இந்திய சுதந்திரத்தில் பெண்களின் சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு சல்யூட்.

பாடம் புகட்டியது



இன்று சிறப்பு வாய்ந்த நாள் ஆப்பரேஷன் சிந்தூர் வீரர்களை வணங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆப்பரேஷன் சிந்தூர் வீரர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா அதிர்ச்சியிலும், கோபத்திலும் ஆழ்ந்தது. பாக் பயங்கரவாதிகளுக்கு நமது ராணுவம் பாடம் புகட்டியது.

மிரட்டலுக்கு...!



அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது. எதிரிகள் மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றால் எங்கு எப்போது தாக்குதல் என்பது குறித்து நமது படைகள் தீர்மானிக்கும். அணு ஆயுத பூச்சாண்டிகளுக்கு எல்லாம் இனி இந்தியா பயப்படாது. பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்து ஊக்கப்படுத்தியவரையும் தண்டிப்போம்.

ரத்தமும், தண்ணீரும்



சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஏற்புடையதல்ல. ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக ஓடாது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானது. சிந்து நதி நீர் இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே சொந்தமானது. நாட்டின் சுதந்திரத்திற்காக எண்ணற்றோர் தனது உயிரை தியாகம் செய்துள்ளனர். இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.


இந்திய சிப்புகள்





உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டன. செமி கண்டக்டர் துறையில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சிப்புகள் சந்தைக்கு வந்துவிடும். இப்போது நாம் செமி கண்டக்டர் துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறோம்.




விண்வெளி மையம்





அணுசக்தி துறையில் பெரிய சீர்திருத்தங்களை செய்து வருகிறோம். 2025ம் ஆண்டிற்குள் மாசற்ற எரிசக்தி இலக்கை எட்டிவிட்டோம். கனிமங்கள் இன்று மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. விண்வெளி துறையில் நிறைய முன்னேற்றங்கள் நிகழும். இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கு சுயசார்பு முக்கியம். விண்வெளியில் இந்தியாவுக்கான விண்வெளி மையத்தை உருவாக்க முயல்வோம்.



உலகின் சந்தையை...!





இளைஞர்கள் உற்பத்தித்துறையில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தியதன் மூலம் பல கோடி மக்களின் உயிரை காப்பாற்றினோம். உலகின் சந்தையை இந்தியா ஆள வேண்டும். தகவல் தொழில்நுட்பம் முதல் சைபர் பாதுகாப்பு வரை தற்சார்பு நிலையை கொண்டு வருவோம்.

அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு கதவுகள் திறந்துள்ளன. வெளிநாடுகளின் சமூக வலைதளங்களை நாம் ஏன் சார்ந்திருக்க வேண்டும்? சொந்த நாட்டின் சமூக வலைதளம் குறித்து நமது இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.




இன்றைய தேவை







சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதே இன்றைய தேவை. கடந்த தலைமுறை சுதந்திரத்திற்காக போராடியது. இந்த தலைமுறை சுயசார்புக்காக போராட வேண்டும். இந்தியர்கள் வியர்வை சிந்தி உருவாக்கிய பொருட்களை மட்டும் வாங்குவோம் என உறுதியேற்போம். உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தி மட்டுமே நமது நாட்டை பலப்படுத்துவோம்.


டாலர், பவுண்டு...!





தற்சார்பு என்பதே இந்தியாவின் முழக்கம். தற்சார்பு மூலம் முன்னேற்றம் பெறுவதே புதிய இந்தியாவின் முழக்கம். டாலர், பவுண்டுகளை சார்த்திருப்பது தற்சார்பு அல்ல. கனிம வளத்தில் தற்சார்பு நிலையை கொண்டு வருவதே எங்களது முக்கிய நோக்கம். போர் விமானங்களுக்கான இன்ஜினை நாட்டிலேயே தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


@block_P@

103 நிமிடங்கள் உரை!@

@ டில்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிறகு, 103 நிமிடங்கள் (1 மணி நேரம் 43 நிமிடங்கள்) நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். இதுவே அவரது மிக நீண்ட சுதந்திர தின உரையாகும்.block_P

Advertisement