'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம்; கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுரை

சென்னை: 'குறைகள் இல்லாமல், 'உங்களுடன் ஸ்டாலின் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டங்களை செயல்படுத்த வேண்டும்' என கலெக்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்களின் வீடுகளுக்கு அருகே முகாம்கள் அமைத்து, பல்வேறு கோரிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கான மனுக்கள் பெறும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொது மக்கள் உடல்நலம் காக்கும் வகையில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும். குறிப்பாக வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறைகளில் நிலுவையில் பெறப்படும் மனுக்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், பட்டாவில் பெயர் திருத்தம் தொடர்பான மனுக்களில், பயனாளிகளுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும்.

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில், ஒரு சில இடங்களில் ரத்த பரிசோதனை முடிவுகள் வழங்குவதில் தாமதம், போக்குவரத்து ஏற்பாடுகள் தாமதம் என்ற தகவல்கள் வந்துள்ளன; அதை சரி செய்ய வேண்டும். குறைகள் இல்லாமல் இந்த முகாம்களை நடத்துவதை, கலெக்டர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசியுள்ளார்.

Advertisement