குடும்பத்தினரிடம் 'டெமோ' காட்டிய பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானி; நடுவானில் பயணிகள் அதிர்ச்சி!

4


வாஷிங்டன்: ஹீத்ரோவிலிருந்து நியூயார்க் சென்ற பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தின் பைலட், பயணம் முழுவதும் காக்பிட் கதவை திறந்து வைத்திருந்ததால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.


லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது, விமானத்தை எப்படி ஓட்டுவது என்பதை அதே விமானத்தில் பயணித்த தனது குடும்பத்தினருக்கு காட்டுவதற்கு விமானி விரும்பியுள்ளார். குடும்பத்தினருக்காக விமானத்தின் காக்பிட்-ஐ (விமானி அறைக்கதவை) விமானி திறந்து காட்டியுள்ளார்.


இந்த சம்பவத்தால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். விமானியின் கவனச்சிதறல் காரணமாக விபத்து ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதே அவர்கள் அச்சத்துக்கு காரணம். கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பரில் பயங்கரவாதிகள் அமெரிக்க பயணிகள் விமானங்களைக் கடத்தி நியூயார்க் நகரில் உள்ள வானளாவிய கட்டடங்களில் மோதியதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இதனால் விமானிகள் விமானி அறை கதவுகளைப் பூட்டியே வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பது விதிமுறை. அங்கீகரிக்கப்படாத நபர்கள் காக்பிட் அறைக்குள் நுழைவதை தடுக்க இவ்வாறு செய்யப்படுகிறது.


இந்நிலையில் விதிமுறைகளை மீறியதற்காக விமானி இடைநீக்கம் செய்யப்பட்டார். விமானியின் செயலை விமானியில் இருந்த மற்ற பணியாளர்கள் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் தெரிவித்தனர்.

விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் கூறியதாவது: விமானி அறையின் கதவு திறந்திருப்பதை விமான ஊழியர்கள் கவனித்தனர். என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்பினர். இந்த விமானியின் செயல் பயணிகளை மிகவும் சங்கடப்படுத்தியது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement