பனையூரில் பதுங்கும் விஜய் திக்கு தெரியாத திருமாவளவன் செல்லுார் ராஜூ கலாய்க்கிறார்

மதுரை:''திருமாவளவன் பாதை மாறி போய்விட்டார். திசை தெரியாமல் காட்டுக்குள் போய்விட்டார். விஜய் பனையூரில் இருந்து கொண்டு அரசியல் செய்கிறார். அவர் வெளியில் வரவேண்டும்'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது: தி.மு.க, அமைச்சர்கள் வீடுகளில் ரைடு நடப்பதால் முன் ஜாமின் வாங்கி வைத்திருக்கிறார்கள்.

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு குறித்து நாங்கள் தான் சொன்னோம். ஆர்ப்பாட்டம் செய்த உடனே 5 மண்டல தலைவர்கள், நிலை குழுத் தலைவர்களை பதவி நீக்கம் செய்து முதல்வர் நடவடிக்கை எடுத்தார்.

ஆனால் இந்நடவடிக்கையில் திருப்தி இல்லை. மேயர் கணவரை கைது செய்திருக்கிறார்கள்.

அதோடு எதிர்க்கட்சியான எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். முறைகேட்டில் மேயருக்கு எவ்வளவு துாரம் தொடர்பு உள்ளது எனத் தெரியவில்லை.

திருமாவளவன் பாதை மாறி திசை தெரியாமல் காட்டுக்குள் போய்விட்டார். அவருக்கு இருந்த இமேஜ், தலைமை பண்பு, நல்ல பெயர் சமீப காலமாக விமர்சிக்கிற அளவில் இருக்கிறது. ஜெயலலிதா குறித்து விமர்சிக்க அவருக்கு என்ன நெருக்கடி வந்தது என்று தெரியவில்லை. வேங்கை வயல் பிரச்னை, மாணவ மாணவிகள் பிரச்னை, ஆணவ கொலைகள் பற்றி தற்போது எதுவும் அவர் பேசுவது இல்லை. அவருக்கு கொள்கை சரிவு ஏற்பட்டுள்ளது.

விஜய் பனையூரில் இருந்து கொண்டு அரசியல் செய்கிறார். அவர் வெளியில் வரவேண்டும். ஆண்டிற்கு ஒரு முறை களத்திற்கு வருகிறார். கடைசி நேரத்தில் இமேஜை வைத்து வரலாம் என்று நினைக்கிறார். மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எல்லோரும் எம்.ஜி.ஆராக முடியாது. தமிழகத்திற்கு ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.,தான்.

இவ்வாறு கூறினார்.

Advertisement