கால்சென்டரில் தரவு கசிவு: ரூ.2.6 கோடி கிரெடிட் கார்டு மோசடியில் 18 பேர் கைது

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களிடமிருந்து ரூ.2.6 கோடி கிரெடிட் கார்டு மோசடி செய்த கும்பலை சேர்ந்த 18 பேரை, டில்லி போலீசார் கைது செய்தனர்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் இருக்கும் கால் சென்டர் ஒன்றில், பணியாற்றும் நபர்கள் மூலம் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் ரகசிய தரவுகளை பயன்படுத்தி கோடிக்கணக்கில் பண மோசடி நடப்பதாக புகார் எழுந்த நிலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையில் மோசடி கும்பலை சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
டில்லி போலீஸ் அதிகாரி வினித் குமார் கூறியதாவது:
கிரடிட் கார்டு மோசடியை தடுக்கும் முயற்சியாக, நடவடிக்கையை மேற்கொண்டிருந்தோம். இது 6 மாத நடவடிக்கை ஆகும். கைதான 18 பேரும்,குருகிராமில் உள்ள கால்சென்டரில் பணிபுரியும் நபர்களிடம் வாடிக்கையாளர்களின் ரகசியத் தரவை பெற்றுள்ளனர்.


வங்கி அதிகாரியாக தங்களை காட்டிக்கொண்டு, வாடிக்கையாளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி கூடுதல் விவரம் பெற்று மோசடி செய்துள்ளனர். இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகிறோம்.இவ்வாறு வினித் குமார் கூறினார்.

Advertisement