கொள்கை முரண்கள் ஒருபோதும் எதிரிகளுக்கு இடம் கொடுத்து விடக் கூடாது; முதல்வர் பேச்சு

4

சேலம்: கொள்கை முரண்கள் ஒருபோதும் எதிரிகளுக்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்று சேலத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அவர் பேசியதாவது; திராவிட இயக்கத்திற்கும், பொதுவுடமை இயக்கத்திற்கும் இருக்கும் நட்பு என்பது கொள்கை நட்பு. சமூகத்திற்கு தேவையான நமது கொள்கை வலுவாக இருக்கும் காரணத்தினால் தான், நம்முடைய நட்பும் வலுவாக இருக்கிறது. எல்லாருக்கும் எல்லாம் என்ற லட்சியத்தின் இரு முகங்கள் தான் திராவிட இயக்கங்களும், பொதுவுடமை இயக்கங்களும்.

இந்தக் கொள்கை உறவோட ஆழத்தை பல தலைமுறை கடந்து சொல்ல வேண்டும். கொள்கை முரண்கள் ஒருபோதும் எதிரிகளுக்கு இடம் கொடுத்து விடக் கூடாது. சேலம் சிறை தியாகிகளின் நினைவாக மணிமண்டபம் கட்டப்படும்.

எத்தனை சதி செய்தாலும், எவ்வளவு குழப்பம் ஏற்படுத்தினாலும், போலி செய்திகளை பரப்பினாலும் இவர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்கிறார்களே, என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார். குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸூக்கு திடீரென கம்யூனிஸ்ட்கள் மீது திடீர் பாசம் வந்துள்ளது. அடிமைத் தனத்தைப் பற்றி இபிஎஸ் பேசலாமா?


திராவிட இயக்கம் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கொள்கையை பற்றி தெரியாத இபிஎஸ் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். கம்யூனிஸ்ட் தலைவர்களை விட நீங்க (இபிஎஸ்) தியாகம் பண்ணீட்டீங்களா? திருமாவளவனை விட நீங்க பெரிய தியாகம் பண்ணீட்டீங்களா? உங்களால் ஏதாவது நிரூபிக்க முடியுமா?


அவங்களுக்கு இருப்பது மக்கள் மீது உண்மையான அக்கறை இல்லை. எப்படியாவது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த வேண்டும் என்ற மலிவான நோக்கத்தோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். நியாயமான கோரிக்கைகளையும் விமர்சனங்களையும் வைப்பதில் கம்யூனிஸ்டுகள் தவறியதில்லை.

நம்மை பொறுத்தவரையில் ஜாதியவாதம், வகுப்புவாதம், ஏதேச்சதிகாரம், பெரும்பான்மைவாதம், மேலாதிக்கம் ஆகியவற்றிற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். ஏனெனில் நமது லட்சியம் பெரிது. ஜனநாயகம், சமூக நீதி, சமதர்மம், சகோதரத்துவம், ஆகியவை நம்மை இணைத்துள்ளது. இவற்றிற்கு எதிரானவர்கள் நம்முடைய கூட்டணியை விரும்பவில்லை. எனவே, பிளவு ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது.


ஜனநாயகத்தின் அடிப்படையான தேர்தலையே மத்திய பாஜ அரசு கேலிக் கூத்தாக்கியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தை தனது கிளை அமைப்பாக பாஜ மாற்றி விட்டது. தன்னாட்சி அமைப்பான தேர்தலை ஆணையத்தை சாவி கொடுத்து ஆடும் பொம்மையாக மாற்றிவிட்டது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் நியமனத்தில் தான் சதி செய்கிறார்கள் என்றால், வாக்காளர் பட்டியலில் இருந்தே தங்களின் சதியை தொடங்கி விட்டார்கள். மக்களாட்சியை காக்க இந்த சதியை அம்பலப்படுத்தியிருக்கும் ராகுலுக்கு பாராட்டுகள். ராகுலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு முறையாக பதிலளிக்காத தேர்தல் ஆணையம், அவரை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறது.


மத்தியில் பாஜ அரசு அமைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று நாம் எச்சரித்தது எல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஹிந்தி மொழியை கட்டாயமாக்குதல், பட்டப்படிப்பு படிக்காமல், பாரம்பரிய குருகுலத்தில் படித்தால் ரூ.75 ஆயிரம் உதவித் தொகையுடன் ஐஐடியில் சேரலாம். ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து சுதந்திர தின உரையில் பிரதமர் பேசியிருக்கிறார், இதுதான் இன்றைய அவல நிலை.

தங்களுக்கு ஒத்து வராத எதிர்க்கட்சிகளை அமலாக்கத்துறையை வைத்து மிரட்டுவாங்கள் என்று சொன்னோம். இன்று அமைச்சர் பெரியசாமி வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள். நடந்தால் ஒடி வந்து சேர்ந்து கொள்ள நாம் என்ன பழனிச்சாமியா? வழக்கம் போல தமிழக மக்கள் உங்களுக்கு தோல்வியை தான் கொடுப்பார்கள். தமிழக மக்கள் அரசியல் தெளிவு உள்ளவர்கள். விழிப்புணர்வு மிக்கவர்கள். 2021ல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றதைப் போல 2026 தேர்தலிலும் வெற்றி பெறுவோம், எனக் கூறினார்.

Advertisement