அமெரிக்கா - பாக்., உறவு நீடிக்காது: முன்னாள் இந்திய துாதர் திட்டவட்டம்

புதுடில்லி: இந்தியா மீது அமெரிக்கா வரிச்சுமை விதித்ததற்கு, இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக முன்னாள் இந்திய துாதர் விகாஷ் ஸ்வரூப் பட்டியலிட்டுள்ளார். அமெரிக்கா - பாகிஸ்தானுக்கு இடையே நீடிக்கும் இந்த நெருக்கம் குறுகிய காலத்துக்கே நீடிக்கும் எனவும் அவர் கணித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாக்., பயங்கரவாதிகள் ஏப்., 22ல் தாக்குதல் நடத்தி, 26 அப்பாவிகளை கொன்று குவித்தனர். இதை தொடர்ந்து நடத்தப்பட்ட, 'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கையில் பாக்.,கில் இருந்த பயங்கரவாத முகாம்கள், அவர்களுக்கு உதவியாக இருந்த ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இந்தியா - பாக்., இடையே நான்கு நாட்கள் சண்டை நீடித்தது. பாக்., ராணுவம் கேட்டுக் கொண்டதால், நம் ராணுவம் தாக்குதலை நிறுத்தியது.
அதே சமயம், இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே நீடித்த போர் நிறுத்தப்பட்டதற்கு, தானே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய வேண்டுமெனில், இரு நாடுகளும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்ததாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.இதை பிரதமர் மோடி திட்டவட்டமாக மறுத்தார். இந்தச் சூழலில், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதனால், இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த மனக்கசப்பு விரைவில் முடிவுக்கு வரும் என, முன்னாள் இந்திய துாதர் விகாஷ் ஸ்வரூப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முட்டுக்கட்டை இது குறித்து அவர் கூறியதாவது:
இந்தியா - பாக்., சண்டை, தன் தலையீட்டால் தான் முடிவுக்கு வந்தது என டிரம்ப் கூறியதை மத்திய அரசு மறுத்ததே இப்பிரச்னைக்கு முதன்மை காரணம். ஆனால், பாகிஸ்தானோ, அவரது பேச்சுக்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அடுத்தக் கட்டத்துக்கு சென்று நேரடியாக முகஸ்துதி பாடியது. இதனால், இந்தியா மீதான கோபம் டிரம்புக்கு அதிகரித்தது.
இரண்டாவதாக, 'பிரிக்ஸ்' அமைப்பில் இந்தியா உறுப்பு நாடாக நீடிப்பதையும் டிரம்ப் விரும்பவில்லை. ஏனெனில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் நாடுகள் பொதுவான கரன்சியை உருவாக்க முயற்சிப்பது, டிரம்புக்கு பிடிக்கவில்லை. நம் நாட்டின் வேளாண் மற்றும் பால்வள துறையில் அமெரிக்க பொருட்களை நுழைக்க, டிரம்ப் மேற்கொண்ட முயற்சிக்கு, பிரதமர் மோடி முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்.
அவரது வர்த்தக அழுத்தத்துக்கு சிறிதும் வளைந்து கொடுக்கவில்லை. ஒருவேளை வளைந்து கொடுத்திருந்தால், டிரம்பிடம் இருந்து கூடுதலாக அழுத்தம் அதிகரித்திருக்குமே தவிர, அத்துடன் நின்றிருக்காது. அந்த வகையில் பிரதமர் மோடி எடுத்த முடிவு மிகவும் சிறந்தது.
கிரிப்டோ கரன்சி என்ற ஆசையை காண்பித்து அமெரிக்காவை, பாகிஸ்தான் தன்பக்கம் இழுத்து இருக்கிறது. இதை வைத்து இந்தியாவுடனான நட்பை அமெரிக்கா முற்றிலும் துண்டித்துக் கொள்ளும் எனவும் சொல்ல முடியாது.
நட்டு வட்டாரம் பாகிஸ்தானுடன் தற்போது ஏற்பட்டிருக்கும் உறவு என்பது குறுகிய காலத்துக்கே நீடிக்கும். நிதி ஆதாயம் சார்ந்த இந்த உறவு நீண்ட ஆண்டுகளுக்கு தொடராது. தவிர, பாகிஸ்தான் எப்போதுமே சீனாவுடன் தான் நெருக்கமாக இருந்து வருகிறது.
இதை, அமெரிக்காவும் நன்கு அறியும். எனவே, தன் நம்பகமான நட்பு வட்டாரத்தில் பாகிஸ்தானை, அமெரிக்கா வைத்திருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும்
-
குருகிராமில் யூடியூபர் வீட்டில் துப்பாக்கிச்சூடு: பைக்கில் வந்த மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
-
பொய் குற்றச்சாட்டுகளை கண்டு பயப்பட மாட்டோம்: தலைமை தேர்தல் கமிஷனர் உறுதி
-
ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.1.13 கோடி அபராதம்: மும்பை போலீஸ் 'சுறுசுறு'
-
நல்ல கூட்டணி அமையும்; தொண்டர்கள் தான் எல்லாமே என பொதுக்குழுவில் ராமதாஸ் உருக்கம்
-
குவைத்தில் சட்டவிரோத மது விற்பனை; இந்தியர் உட்பட 67 பேர் கைது
-
டில்லியில் சிறப்பான சாலை போக்குவரத்து; 2 புதிய நெடுஞ்சாலைகளை திறந்து வைத்த மோடி பெருமிதம்