இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் தருணம்; டில்லியில் சுக்லாவை வரவேற்ற மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

2


புதுடில்லி: டில்லியில் மத்திய விண்வெளி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், சுபான்ஷூ சுக்லாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வரவேற்றார். அவர், ''இது இந்தியாவிற்கும், இஸ்ரோவிற்கும் பெருமையான தருணம்'' என பாராட்டினார்.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவின் லட்சிய திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் சுபான்ஷு சுக்லா. இவர், நாசா மற்றும் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்னும் தனியார் நிறுவனம் சார்பில் 'ஆக்சியம்- - 4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு, மேலும் மூன்று பேருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த, ஜூன் 25ல் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து புறப்பட்ட இவர்கள், சர்வதேச விண்வெளி மையத்தை மறுநாள் அடைந்தனர். கடந்த, ஜூலை 15ல் பூமிக்கு திரும்பினர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாயம் உட்பட பல ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த பயணம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷு சுக்லாவுக்கு கிடைத்தது.



இந்நிலையில் இன்று அதிகாலையில் டில்லி விமான நிலையத்திற்கு சுபான்ஷு சுக்லா வந்தடைந்தார். விமான நிலையத்தில் சுக்லாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோ தலைவர் நாராயணன், டில்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் அவரது மனைவி, மகன் உட்பட அவரது குடும்பத்தினர் வரவேற்றனர்.



சுக்லாவை விமான நிலையத்தில் வரவேற்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியிருப்பதாவது: இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் தருணம். இஸ்ரோவிற்கு பெருமை சேர்க்கும் தருணம். பிரதமர் மோடி தலைமையில் இதற்கு வழிவகுத்த நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கும் தருணம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement