போக்குவரத்துக் கழகத்துக்கு குத்தகை முறையில் ஊழியர்கள் நியமனம்: அன்புமணி கண்டனம்

1

சென்னை; மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு குத்தகை முறையில் 2192 டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமனம் என்பது சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் செயல் என்று பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;


சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகத்திற்கு 1020 டிரைவர்களும், 1172 கண்டக்டர்களும் தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் நியமிப்பட இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை மறைமுகமாக தனியார் மயமாக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.


மாநகரப் போக்குவரத்துக் கழகங்களில் மேலும் 2192 டிரைவர்களும், கண்டக்டர்களும் குத்தகை முறையில் நியமிக்கப்படும் போது, குத்தகை முறை பணியாளர்களின் எண்ணிக்கை 3692 ஆக அதிகரிக்கும். மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தமுள்ள சுமார் சுமார் 16 ஆயிரம் டிரைவர், கண்டக்டர் பணியிடங்களில் இது கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகும்.


மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளும், மனிதவளமும் பெருமளவில் தனியார் மயமாக்கப்பட்டு விட்ட நிலையில், அதன் பெயர் மட்டும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் என்று இருப்பது, '' மாப்பிள்ளை அவர் தான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” என்ற நகைச்சுவையைத் தான் நினைவுபடுத்துகிறது.


போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் நேரடியாக டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமிக்கப்படும் போது அவர்களுக்கு கவுரமான ஊதியம் வழங்கப்படுவது மட்டுமின்றி, அவர்கள் அனைவரும் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், இப்போது இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் யாரை வேண்டுமானாலும் தனியார் நிறுவனங்கள் நியமிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, பணியாளர்களின் உழைப்பும் சுரண்டப்படும்.


போக்குவரத்துக் கழகங்களுக்கு குத்தகை முறையில் டிரைவர், கண்டக்டர்களை நியமிப்பதன் மூலம் சமூகநீதியை குழி தோண்டி புதைத்தல், உழைப்புச் சுரண்டலை ஊக்குவித்தல், அரசின் வளங்களை தனியாருக்கு தாரை வார்த்தல் ஆகிய முப்பெரும் பாவங்களை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. இதற்காக திமுகவுக்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.


இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement