தமிழகம் 'திரில்' வெற்றி * மும்பை அணியை வீழ்த்தியது

சென்னை: தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. மும்பை, பஞ்சாப் உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. தமிழகத்தின் சார்பில் தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன், தமிழக கிரிக்கெட் சங்க லெவன் என இரு அணிகள் பங்கேற்கின்றன.
நேற்று 3வது, கடைசி நாள் ஆட்டம் நடந்தன. திருவள்ளூரில் நடந்த போட்டியில் தமிழக கிரிக்கெட் சங்க லெவன், மும்பை அணிகள் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் மும்பை 412/5, தமிழகம் 325/5 ரன் எடுத்தன. நேற்று 87 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய மும்பை அணி, 178 ரன்னில் சுருண்டது. தமிழகத்தின் சித்தார்த் 5, ஷாருக்கான் 3 விக்கெட் சாய்த்தனர்.
அடுத்து 266 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது தமிழகம். சச்சின் (115 ரன், 110 பந்து) சதம் அடிக்க, ஆதிஷ் (57 ரன், 39 பந்து) அரைசதம் அடித்தார். ஒருகட்டத்தில் 249/8 என திணறியது. பின் சோனு (31), சித்தார்த் (12) அவுட்டாகாமல் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். கடைசியில் கவுரவ் பந்தில் சித்தார்த் பவுண்டரி அடிக்க, தமிழக அணி 268/8 ரன் எடுத்து, 2 விக்கெட்டில் 'திரில்' வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் முதல் இன்னிங்சில் தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி 274, இமாச்சல பிரதேசம் 214 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் தமிழக அணி 246/5 ரன் எடுத்தது. இமாச்சல பிரதேச அணி 110 ரன்னில் சுருண்டது. தமிழகம் 196 ரன்னில் அபார வெற்றி பெற்றது. வித்யுத் 4, அச்யுத் 3 விக்கெட் சாய்த்தனர்.

Advertisement