சிறையில் இருந்து அரசை நடத்துவது சரியானதா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்: அமித் ஷா

19

புதுடில்லி: 'அரசியல்வாதிகள் சிறையில் இருந்துகொண்டு அரசு நடத்துவது சரியானதா என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டும்,' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

அரசு பதவியில் இருக்கும் பிரதமர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.


இது தொடர்பாக அமித் ஷா பதிவிட்டுள்ளதாவது:
நமது நாட்டில் அரசியல் ஊழலுக்கு எதிரான மோடி அரசின் உறுதிப்பாட்டையும் பொதுமக்களின் சீற்றத்தையும் கருத்தில் கொண்டு, இன்று லோக்சபா சபாநாயகரின் ஒப்புதலுடன் நாடாளுமன்றத்தில் ஒரு அரசியலமைப்பு திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தினேன்.


அரசாங்கத்தை நடத்த முடியாது:

இது பிரதமர், முதல்வர் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்கள் போன்ற முக்கியமான அரசியலமைப்பு பதவிகளில் இருப்போர், சிறையில் இருக்கும்போது அரசாங்கத்தை நடத்த முடியாது என்பதை உறுதி செய்கிறது.
அரசியல் சட்டம் உருவாக்கியவர்கள், இப்படி ஒரு சூழ்நிலை எதிர்காலத்தில் வரும் என்று கற்பனை செய்திருக்க மாட்டார்கள். ஆனால் சமீப காலத்தில், கைது செய்யப்படும் முதல்வர்கள் சிறையில் இருந்தபடி ராஜினாமா செய்யாமல் அரசை நடத்தும் மோசமான நிலை ஏற்பட்டிருக்கிறது.

பதவி நீக்கம்:

இந்த மசோதாவின் நோக்கம் பொது வாழ்வில் குறைந்து வரும் ஒழுக்கத்தின் அளவை உயர்த்துவதும் அரசியலுக்கு ஒருமைப்பாட்டைக் கொண்டுவருவதும் ஆகும்.
கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் எந்த ஒரு நபரும், பிரதமர், முதலமைச்சர் அல்லது மத்திய அல்லது மாநில அரசின் அமைச்சராக ஆட்சி செய்ய முடியாது.
இந்த சட்டத்தின்படி, குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதி கைது செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் ஜாமின் பெற வேண்டும். 30 நாட்களுக்குள் ஜாமின் பெறத் தவறினால், 31வது நாளில், அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் அல்லது பதவிக்கு தகுதியற்றவர்களாகி விடுவர்.

சட்ட நடைமுறைக்குப் பிறகு அத்தகைய தலைவருக்கு ஜாமின் வழங்கப்பட்டால், அவர்கள் மீண்டும் தங்கள் பதவியைத் தொடரலாம்.இப்போது, ஒரு அமைச்சர், முதல்வர் அல்லது பிரதமர் சிறையில் இருக்கும்போது அரசாங்கத்தை நடத்துவது சரியானதா என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

பதவி ஏற்கவில்லை:


இன்று காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், எனக்கு எதிராக தனிப்பட்ட ஒரு கருத்தை தெரிவித்தார். நான் கைது செய்யப்பட்டபோது ராஜினாமா செய்யவில்லை என்றார்.உண்மை என்னவெனில், நான் கைது செய்யப்படுவதற்கு முன்னரே ராஜினாமா செய்து விட்டேன். ஜாமினில் வந்த பிறகும் கூட, நீதிமன்றத்தால் நிரபராதி என்று அறிவிக்கப்படும் வரை எந்த பதவியையும் ஏற்கவில்லை.


என் மீதான வழக்கை, அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அத்வானி மீது குற்றச்சாட்டு எழுந்தபோதும் அவர் ராஜினாமா செய்தார். ஆனால், காங்கிரஸ், இந்திரா தொடங்கிய அறம் இல்லாத செயல்களை இன்று தொடர்கிறது.லாலுவை காப்பாற்றுவதற்காக சட்டம் கொண்டு வந்தது காங்கிரஸ். அதை எதிர்த்த ராகுல், இன்று அதே லாலுவுடன் குலாவிக் கொண்டிருக்கிறார். பொதுமக்கள் இந்த பொய்யான நிலைப்பாட்டை புரிந்து கொண்டிருக்கின்றனர்.

மசோதா எதிர்ப்பு;

இந்த மசோதா, பார்லி கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினர் அனைவரும் ஊழல்வாதிகளை காப்பாற்றும் நோக்கத்துடன் ஒன்று சேர்ந்து இந்த மசோதாவை எதிர்க்கின்றனர். இதன் மூலம் அவர்கள் மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கின்றனர்.இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement