தர்மஸ்தலா கோவில் புகழை கெடுக்க சர்வதேச சதி வலை!

47


பெங்களூரு: தர்மஸ்தலா கோவில் பற்றி அவதுாறு பரப்பி கூக்குரல் எழுப்பிய சர்வதேச ஊடகங்கள், அது பொய்யான தகவல் என்று தெரிந்தபிறகு அமைதியாகி விட்டன. சர்வதேச ஊடகங்களின் பின்னணியில், இந்தியாவுக்கு எதிரான சதிச்செயல் இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் அமைந்துள்ளது மஞ்சுநாதர் கோவில். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். உலகம் முழுவதும் பிரபலமான இந்த கோவில் பற்றி அவதுாறு பரப்பும் வகையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

கடந்த 20 ஆண்டுகளாக இங்கு பெண்கள் பலர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக, கோவில் முன்னாள் ஊழியர் ஒருவர் கூறிய விவகாரம் தான் இப்படி பூதாகரமாக உருவெடுத்தது.
இதை பயன்படுத்தி, கோவிலின் புகழை கெடுக்கும் நோக்கத்துடன் சர்வதேச ஊடகங்கள் பல தொடர்ந்து செய்தி வெளியிட்டன.



இவற்றில் முக்கியமானது, அல் ஜசீரா. இந்தியாவை பற்றி தொடர்ந்து அவதுாறாக செய்தி வெளியிடும் வழக்கம் கொண்ட இந்த ஊடகம், தர்மஸ்தலா கோவிலை பற்றி அப்பட்டமான பொய்கள் அடங்கிய செய்தியை வெளியிட்டது. இதேபோல, ராய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனம், ஏபிசி (ஆஸ்திரேலியன் பிராட்காஸ்டிங் கார்ப்பரேசன்), டிடபிள்யூ (ஜெர்மனி நாட்டு ஊடகம்), கார்டியன் (பிரிட்டன்), பிபிசி (பிரிட்டன்), இன்டிபென்டன்ட் (பிரிட்டன்) ஆகிய நிறுவனங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.


இவற்றின் நோக்கம், நடந்த சம்பவத்தை வெளியுலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதல்ல. புகழ்பெற்ற ஹிந்து கோவில் பற்றி அவதுாறு பரப்ப கிடைத்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்பது தான். 'இந்தியாவில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடாதா' என்று வெறும் வாயை மென்று கொண்டிருந்த இந்த ஊடகப்புலிகளுக்கு அவல் கொடுத்தது போல, கோவிலின் முன்னாள் ஊழியர் புகார் கொடுத்தார்.


அவர்களும், 'கிடைத்தது வேட்டை' என்று நீட்டி முழக்கி, வீடியோவும், பேட்டியுமாக வெளியிட்டு அவதுாறு பரப்பினர். ஆனால், அவர்கள் புளுகு ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை. புகார் கொடுத்த கோவிலின் முன்னாள் ஊழியர், இப்போது பல்டி அடித்து விட்டார்.'தமிழகத்தை சேர்ந்த ஒரு கும்பல் கூறியதன் பேரிலேயே, தான் புகார் கிளப்பியதாக' அந்த முன்னாள் ஊழியர் தெரிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இதன் மூலம், தர்மஸ்தலா கோவிலில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்டனர் என்ற பரப்பப்பட்ட தகவல்கள், அப்பட்டமான பொய் என்பது அம்பலமாகியுள்ளது. தங்கள் பொய் வெளிப்பட்டு விட்டதால் சர்வதேச ஊடகங்கள் அமைதியாகி விட்டனர்.ஊடகத்துறையில் முன்னணியில் இருக்கும் ஊடகங்கள் சொல்லி வைத்தாற்போல, செய்தி வெளியிட்டதன் பின்னணியில் சதித்திட்டம் இருக்கும் என்ற கருத்து பலராலும் முன் வைக்கப்படுகிறது.



பொருளாதாரத்திலும், சர்வதேச அரங்குகளிலும் இந்தியா முன்னிலைக்கு வந்து விட்டதை ஜீரணிக்க முடியாத மேற்கத்திய அமைப்புகள் பல, இந்த சதியின் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. புகார் அளித்த கோவிலின் முன்னாள் ஊழியரின் பின்னணியில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் இருப்பதாக வெளியான தகவல், இத்தகைய சந்தேகத்தை மேலும் பெரிதாக்குகிறது.


கோவிலின் புகழை கெடுக்கவும், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வரும் இந்திய புனிதத்தலங்களின் மரியாதையை உலகளவில் நாசம் செய்யவும் திட்டமிட்டு இந்த பொய்ப்புகார் அளிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த சதித்திட்டத்தை ஆராயவும், பின்னணியில் இருக்கும் சூத்திரதாரிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவும், என்.ஐ.ஏ., அல்லது சிபிஐ மூலமாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement