கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கும் திருமாவளவன்: நயினார் நாகேந்திரன் ஆதங்கம்

20


திருநெல்வேலி: ''கூட்டணி கட்சிகளுக்குள் திருமாவளவன் சிக்கி தவிக்கிறார்'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் நிருபர்களை சந்திப்பில் கேள்விகளுக்கு, நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.

நிருபர்: 30 நாட்கள் சிறையில் இருந்தால் தலைவர்கள் பதவி இழப்பார்கள் என்று சட்டம் கொண்டு வருவது எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு சதி என்று கூறுகிறார்களே?



நயினார் நாகேந்திரன் பதில்: அந்த எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, ஆளும் கட்சியில் இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கும் பொருந்தும். தேர்தலில் போட்டியிடும் போது, எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, ஆளும்கட்சிக்கும் பொருந்தும்.

இது நல்ல விஷயம் கூட, அரசியல்வாதிகள் நே ர்மையானவர்களாக இருக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்களாக இருக்க கூடாது என்பதற்காக கொண்டு வருப்படும் சட்டம். நல்ல சட்டம். நாடு போற்றும் சட்டம். இந்த சட்டத்திற்கு எல்லோரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.



நிருபர்: தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரத்தை விசிக எதிர்க்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளாரே?


நயினார் நாகேந்திரன் பதில்:
நண்பர் திருமாவளவன் மீது தனிப்பட்ட முறையில் பற்றும், பாசமும் வைத்து இருக்கிறேன். அதேநேரத்தில் அவர் கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிப்பதை இந்த செய்தி மூலம் நாம் பார்க்க முடிகிறது.



தேர்தல் நேரத்தில், பகுதிநேர தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்வோம் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், 15 நாட்களாக வெயிலிலும், மழையிலும் அவர்கள் போராடியபோது இந்த அரசு கண்டுகொள்ளவில்லை.


இந்த திமுக கூட்டணிக்குள் இருந்து கொண்டு அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லையே என்று மன வருத்தத்தின் வெளிப்பாடு தான் இது என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழரை ஆதரிக்காத முதல்வர்



நிருபர்: துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழக பாஜ வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை திமுக கூட்டணி ஆதரிக்காதது ஏன்?

நயினார் நாகேந்திரன் பதில்: தமிழகத்தைச் சேர்ந்த, ஜார்க்கண்ட் மாநில கவர்னராக சிறப்பாக பணியாற்றிய, நேர்மையான, நல்லவரான சி.பி. ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி வேட்பாளராக எங்கள் கூட்டணி அறிவித்திருக்கிறது. அவரை ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை.



எதற்கெடுத்தாலும் தமிழ் உணர்வு, தமிழ் பண்பாடு, கலாசாரம், தமிழருக்காக வாழ்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஒரு தமிழரை ஆதரிக்காமல் இருப்பது ஏன்? இதுதான் அவர்கள் சொல்லும் திராவிட மாடலா?


இதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கட்சி பாகுபாடின்றி ஒரு தமிழரை ஆதரிப்பதாக சொல்லியிருக்கிறார். அந்த தமிழ் பற்றை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால், முதல்வர் ஆதரிக்காதது வருத்தம் அளிக்கிறது" என்றார்.

Advertisement