சாக்குபோக்கு சொல்லாமல் தமிழர் சி.பி.ஆருக்கு ஆதரவு அளியுங்கள்: ஸ்டாலினுக்கு அண்ணாமலை வேண்டுகோள்

56

சென்னை: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும், சாக்குபோக்கு சொல்லாமல் முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தர வேண்டும் என்று தமிழக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.



அவர் அளித்த பேட்டி;


மஹாராஷ்டிரா கவர்னர் சி,பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். உறுதியாக அவர், வெற்றி பெற்று அந்த இருக்கைக்கு பெருமை சேர்ப்பார். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றாக இருந்து, அவரை வெற்றி பெறச் செய்து அந்த இருக்கைக்கு அனுப்ப வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள்.


நம்மை பொறுத்த வரை முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி நல்ல வேட்பாளர் தான். சி.பி. ராதாகிருஷ்ணன் நல்ல மனிதர் என்று ஜார்க்கண்ட், எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் கூட சொல்கின்றனர். மஹாராஷ்டிராவில் இண்டி கூட்டணியில் இருக்கும் சிவசேனாவும் அவர் நல்ல மனிதர் என்று கூறுகின்றனர்.


எனவே இண்டி கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு என்பதை மறு பரிசீலனை செய்ய முதல்வர் ஸ்டாலினுக்கு நேரம் இருக்கிறது. எனவே சாக்கு போக்கு சொல்லாமல் இதில் அரசியல் இல்லை என்று தெளிவுபடுத்துவதற்கு, ஒரு தமிழருக்கு நாம் எல்லோரும் சேர்ந்து துணை நின்றோம் என்ற ஒரு நல்ல விஷயத்தை மக்கள் மன்றத்தில் வைப்பதற்கு திமுகவுக்கு நல்ல வாய்ப்பாக இதை பார்க்கிறேன்.


சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஒருமித்த ஆதரவு தமிழகத்தில் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏகமனதாக எங்களிடம் இருக்கிறது.அவர் அனைத்து கட்சியினரிடம் அன்பும், நட்பும் பாராட்டிய நல்ல மனிதர். துணை ஜனாதிபதியாக அவர் வருவது ஆர்எஸ்எஸ்க்கும், தமிழருக்கும் பெருமை.


பார்லிமென்டில் புதிய மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பிரதமர், கேபினட் அமைச்சர்கள், முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடிய ஒன்று. டில்லியில் ஒரு அமைச்சர் பல காலம் சிறையில் இருந்தார். தமிழகத்தில் ஒரு அமைச்சர் பல காலம் இதே போல சிறையில் இருந்தார். கடைசியில் தான் அவர் நீக்கப்பட்டார். ஜார்க்கண்ட்டில் ஒரு அமைச்சர் கைது செய்யப்படும்போது பிரச்னையானது.


எனவே, யாரை கைது செய்தாலும் கோர்ட் நடுநிலைமையாக இருக்கிறது. 31வது நாள் ஒருவர் சிறையில் இருக்கும்போது நேரடியாக நீக்கப்படுவார்கள் என்பது வரவேற்கக்கூடிய ஒன்று. சட்டத்தில் குறிப்பிட்டுள்ள 31 நாட்கள் என்பதும் வரவேற்க வேண்டிய ஒன்று.


விஜய் மாநாடு நடத்தட்டும். மாநாடு நடத்த எல்லாருக்கும் உரிமை உள்ளது. ஆக்ரோஷமாக போக வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள், போகட்டும். எல்லாரும் அரசியல் களத்தில் இருக்கிறோம். ஆகவே மக்கள் எங்கள் சித்தாந்தத்தையும், கொள்கைகளையும் அதிகம் நம்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


திமுகவை ஆட்சியில் இருந்து இறக்கி, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று மக்கள் பேச ஆரம்பித்துவிட்டனர். எனவே விஜய்க்கும் வாழ்த்துகள், அவரது மாநாட்டுக்கும் வாழ்த்துகள்.


இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement