ம.தி.மு.க.,வில் மல்லை சத்யா சஸ்பெண்ட்; செப்., 15ல் புதிய கட்சி துவங்க திட்டம்

2

சென்னை: ம.தி.மு.க.,வில் இருந்து, அக்கட்சியின் துணை பொதுச்செயலர் மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

ம.தி.மு.க.,வில் முதன்மை செயலர் துரைக்கும், துணை பொதுச்செயலர் மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் வெடித்தது.

தனக்கென தனி கோஷ்டி உருவாக்கும் வேலையில் சத்யா ஈடுபடுவதாக, பொதுச்செயலர் வைகோவுக்கு தகவல் சென்று, சத்யா மீது கோபம் ஏற்பட்டது.

கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கோஷ்டி பூசல் வெடித்த நிலையில், துரையையும், மல்லை சத்யாவையும் சமாதானப்படுத்திய வைகோ, இருவரையும் கைகுலுக்க வைத்தார்.

ஆனால், சில நாட்களிலேயே, சத்யா தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக, வைகோ குற்றம்சாட்டினார்.

இதற்கு மல்லை சத்யா, 'துரோகி என அழைத்ததற்கு பதில், விஷம் கொடுத்திருக்கலாம்' என பதிலளித்ததோடு, வைகோ ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகச் சொல்லி, அவருக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தையும் சென்னையில் நடத்தினார்.

கட்சிக்குள் பூசல் நீடித்த நிலையில், ம.தி.மு.க.,வின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாக, வைகோ நேற்று அறிவித்தார்.

அந்த அறிக்கையில், 'ம.தி.மு.க., சட்டத் திட்டங்களுக்கு எதிராக சத்யா செயல்பட்டுள்ளார். இது, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்திருக்கிறது. அவர், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார்.

'அவர், 15 நாளில், என்னிடம் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும்; இல்லாவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ம.தி.மு.க., பெயரையோ, கட்சிக் கொடியையோ, அவர் பயன்படுத்தக் கூடாது' என கூறியுள்ளார்.

இதற்கிடையே, ம.தி.மு.க., சார்பில், செப்., ௧௫ல் திருச்சியில் மாநாடு நடக்கிறது.

அதற்கு, போட்டியாக, கட்சியில் அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து, காஞ்சிபுரத்தில் அதே நாளில் தனி மாநாடு நடத்த சத்யா திட்டமிட்டு உள்ளார்.

அந்த மாநாட்டில், புதிய கட்சி அறிவிப்பை சத்யா வெளியிட உள்ளார்.

மாநாட்டு பணிகளுக்காக, சென்னையில் மல்லை சத்யா நடத்திய கூட்டத்தில், கட்சியின் தென் சென்னை மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் செல்வபாண்டியன், ௧ லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்தார்.

Advertisement