குண்டும் குழியுமான சாலைக்கு சுங்க கட்டணம் வசூலிக்க தடை

புதுடில்லி:'குண்டும் குழியுமாக இருக்கும் சாலைக்கு பொதுமக்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிப்பதா?' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், சுங்கக் கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்தது.

கேரள மாநிலம், எடப்பள்ளி - -மன்னுத்தி இடையிலான தேசிய நெடுஞ்சாலை மிக மோசமான நிலையில், குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அவ்வப்போது, மிகக் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையில், திருச்சூர் மாவட்டத்தின் பளியெக்கரா என்ற இடத்தில் சுங்கச்சாவடி அமைத்து, வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது.

கடமை மிக மோசமான நிலையில் இருக்கும் சாலைக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள பளியெக்கரா சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கு, 4 வாரங்களுக்கு தடை விதித்து, கடந்த 6ம் தேதி உத்தரவிட்டது.

மேலும், 'மோசமான பராமரிப்பு, போக்குவரத்து நெரிசல்களால் திணறும் சாலைக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. பொதுமக்கள் சுங்கக் கட்டணம் செலுத்தும்போது, அவர்களுக்கு சுமூகமான, பாதுகாப்பான பயண வசதியை செய்து தருவது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கடமை' என தீர்ப்பில் தெரிவித்தது.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் அமர்வு, நேற்று முன்தினம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அப்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாக விமர்சித்தது.

கேள்வி விசாரணையின்போது, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், சமீபத்தில் அந்த சாலையில் 12 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை சுட்டிக்காட்டி, 'சாலையில் ஒரு முனையில் இருந்து மறு முனையில் உள்ள, 65 கி.மீ., துாரத்தை கடக்க வழக்கமாக ஒரு மணி நேரம் ஆகும்.

சமீபத்திய போக்குவரத்து நெரிசலால், 12 மணி நேரம் ஆகி இருக்கிறது. அப்படி என்றால், சாதாரண குடிமக்கள் எதற்காக சுங்கக் கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும்?,' என, கேள்வி எழுப்பினார்.

மேலும், 'தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ச்சியாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள், மேடு, பள்ளங்கள் போன்றவை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், திறமையின்மைக்கான அடையாளங்கள்' எனவும் காட்டமாக விமர்சித்த நீதிபதி, சுங்கக் கட்டண வசூலுக்கு கேரள உயர் நீதிமன்றம் விதித்த தடையை உறுதி செய்ததுடன், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement