கூட்டணி தலைவர்களுக்கு முதல்வர் வீட்டில் விருந்து; தொகுதி குறைப்பு, புதிய கட்சிகள் வருகை குறித்து பேச்சு

4



திருமண நாளை ஒட்டி, கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு விருந்து அளித்த கையோடு, தே.மு.தி.க.,வுக்கும், பன்னீர்செல்வம் அணிக்கும் தொகுதி பங்கீடு செய்வது குறித்தும், ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.,வை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த மாதம், முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு செல்கிறார். அதற்கு முன், கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து, அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேச முதல்வர் ஸ்டாலின் விரும்பினார்.




தி.மு.க., கூட்டணியில் உள்ள எந்த கட்சியும், நடிகர் விஜய் பக்கம் போய் விடக்கூடாது என்பதற்காகவும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் நெருக்கத்தை அதிகரிக்கவும், இந்த விருந்துக்கு முதல்வர் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.



தன், 50வது திருமண ஆண்டு தினத்தை ஒட்டி, சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் ஏற்பாடு செய்த விருந்துக்கு, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் 10 பேருக்கும் அழைப்பு விடுத்தார்.



அவரது அழைப்பை ஏற்று பங்கேற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து, பரிசு பொருட்களும் வழங்கினர்.



தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான, 'அக்கார்டு' ஹோட்டலில் இருந்து சைவ, அசைவ உணவு வகைகள் கொண்டு வரப்பட்டு, விருந்தில் பரிமாறப்பட்டன.



விருந்து முடிந்ததும், துணை ஜனாதிபதி தேர்தல், தி.மு.க., கூட்டணியில் கூடுதலாக புதிய கட்சிகளை இணைப்பது குறித்து, கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார்.

பின், ஒவ்வொரு கட்சித் தலைவரையும் தனித்தனியாக சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து, வழி அனுப்பி வைத்தார். முதல்வர் நடத்திய ஆலோசனை குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:


கடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு 25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி., - ம.தி.மு.க., ஆகிய நான்கு கட்சிகளுக்கும் தலா ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.




கொ.ம.தே.க., முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா மூன்று தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டன. தி.மு.க., 173, கூட்டணி கட்சிகள் 61 தொகுதிகளிலும் போட்டியிட்டன.



வரும் சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,வையும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியையும் சேர்க்க தி.மு.க., விரும்புகிறது.



ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.,வும் இணைய விரும்புகிறது. இது தொடர்பாக, தொலைபேசியில் ராமதாசிடம் பேசிய விபரத்தையும் முதல்வர் ஸ்டாலின் எடுத்து கூறியுள்ளார்.



'பா.ம.க.,வில் நடக்கும் மோதல் முடிவுக்கு வந்த பின், அக்கட்சியை சேர்ப்பது குறித்து முடிவெடுக்கலாம்; அதுவரை அக்கட்சியை காத்திருப்போர் பட்டியலில் வைக்கலாம்' என, முதல்வரிடம் கூட்டணி கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்; அவரும், அதை ஏற்றுக் கொண்டார்.



புதிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதால், இரு கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க., முஸ்லிம் லீக் ஆகிய மூன்று கட்சிகளுக்கான தொகுதிகளை குறைப்பது குறித்து முதல்வர் ஆலோசித்துள்ளார்.



அது பற்றி அவர்களிடம் எடுத்துக் கூறியதுடன், தொகுதிகள் மட்டுமே குறைக்கப்படும் எனவும், வெற்றி பெற வைப்பதற்கான அனைத்து உதவிகளையும் தி.மு.க.,வே செய்யும் என்றும் தெரிவித்திருக்கிறார்.



கமலுக்கும், ராமதாஸ் வந்தால் அவருக்கும், தி.மு.க., தன் பங்கில் இருந்து தொகுதிகளை விட்டுக் கொடுக்கும் என்றும் முதல்வர் கூறி உள்ளார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.



- நமது நிருபர் -

Advertisement