தி.மு.க., பற்றி அடக்கிவாசிப்பு; முதல்வர் சந்திப்புக்கு பின் சீமான் பேச்சில் மாற்றம்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பின், த.வெ.க., தலைவர் விஜயை குறிவைத்து, கடுமையாக தாக்கி பேசி வருகிறார். அதேநேரம், தி.மு.க., குறித்த பேச்சில் கடும் சொற்களை தவிர்த்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அறிக்கை, மேடை பேச்சு, பத்திரிகையாளர்கள் சந்திப்பில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் தி.மு.க.,வினர் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக, ஈ.வெ.ரா.,வுக்கு எதிராகவும், தி.மு.க.,வுக்கு எதிராகவும் சீமான் பேசி வந்தார்.
இந்த பேச்சுக்கு அரசியல் வட்டாரத்தில் ஆதரவும், எதிர்ப்பும் காணப்பட்டது. தி.மு.க., மற்றும் ஈ.வெ.ரா., குறித்து சீமான் தொடர்ந்து பேசியதால், அது பிடிக்காத அவரது கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் சிலர் விலகி, தி.மு.க.,விலும், இதர கட்சிகளிலும் சேர்ந்தனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க.முத்து மறைவு குறித்து விசாரிக்க, கடந்த மாதம் முதல்வரை, அவரது இல்லத்தில் சீமான் சந்தித்து பேசினார். 'இந்த சந்திப்பு, அரசியலுக்கு அப்பாற்பட்ட அன்பு' என சீமான் தெரிவித்து இருந்தார்.
ஆனால், அதன்பின்னர் சீமானின் அரசியல் நடவடிக்கைகளில் மாற்றம் தென்படத் துவங்கிவிட்டது. அறிக்கைகள், மேடை பேச்சு, பத்திரிகையாளர்கள் சந்திப்பில், முதல்வர் மற்றும் தி.மு.க.,வினரை சீமான் விமர்சித்தாலும், கடும் சொற்களை தவிர்த்து வருகிறார்; பழைய ஆக்ரோஷமான குற்றச்சாட்டுகள் இல்லை.
நாம் தமிழர் கட்சி, வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டால், தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சீமானின் இந்த திடீர் மாற்றம், தி.மு.க.,வுக்கு லாபகரமானதாக இருக்கும் என அக்கட்சியினர் கூற துவங்கி உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, தனித்து போட்டியிட வேண்டும் என்பதில், தான் உறுதியாக இருப்பதாக சீமான் சொல்லி வருவதும், தி.மு.க.,வினரிடம் கடும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் தான், தி.மு.க., மீதான மோதலை குறைத்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சித் தொண்டர்களை கடுமையாக, சீமான் மேடை தோறும் விமர்சிக்கத் துவங்கியுள்ளார். இந்த மாற்றத்தால், நா.த.க., - த.வெ.க., தொண்டர்கள், சமூக வலைதளங்களில் அநாகரிகமான சொற்களை பயன்படுத்தி, வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, நா.த.க.,வினர் கூறியதாவது:
எல்லாரையும் ஒரே மாதிரியாகத்தான் விமர்சிக்கிறார் சீமான். விஜயின் செயல்பாடுகள் விமர்சிக்கும்படியாக உள்ளதால், அவரையும் விமர்சிக்கிறார். இது தனிப்பட்ட மோதல் இல்லை; கொள்கை அடிப்படையிலான அரசியல் மோதல். விஜய் கட்சியினரும் நாம் தமிழர் தொண்டர்களை விமர்சிக்கின்றனர். அக்கட்சியின் செயல்பாடுகளை பொறுத்து, நாம் தமிழர் கட்சியின் செயல்பாடும் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -




மேலும்
-
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் நன்கொடை
-
குண்டும் குழியுமான சாலைக்கு சுங்க கட்டணம் வசூலிக்க தடை
-
டில்லியில் பள்ளிகளுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: இன்றும் 5 பள்ளிகளில் சோதனை
-
3 பேருக்கு எஸ்.பி.,யாக பதவி உயர்வு
-
மாநில பணியாளர் தேர்வு முகமை அமைக்க... அரசாணை வெளியீடு; இளைஞர்கள் நீண்ட நாள் ஏக்கத்திற்கு விடிவு
-
அமெரிக்க அரசின் சிடிசி நிறுவன ஊழியர்கள் 600 பேர் பணிநீக்கம்