மகளிர் உரிமை தொகை ரூ.1,500; தீபாவளிக்கு சேலை, பொங்கலுக்கு ரூ.2,500 வாக்குறுதிகளை அள்ளி வீசும் பழனிசாமி

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடந்த ஜூலை 7 முதல் 34 நாட்களில், தமிழகத்தின் 100 சட்டசபை தொகுதிகளில் பிரசார பயணம் செய்து உள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தை, கடந்த ஜூலை 7ம் தேதி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி துவங்கினார்.
இதுவரை கோவை, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள, 100 சட்டசபை தொகுதிகளில், அவர் பிரசார பயணத்தை முடித்துள்ளார்.
பயணத்தின்போது, 'தாலிக்கு தங்கம்; மருத்துவம், பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு; அம்மா உணவகம்; அம்மா கிளினிக்; இலவச லேப்-டாப்; இலவச ஆடு, மாடு' என, அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்களை பேசினார்.
அதேபோல, 'அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மகளிர் உரிமைத் தொகை 1,500 ரூபாயாக அதிகரிப்பு; பொங்கலுக்கு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 2,500 ரூபாய்; தீபாவளிக்கு இலவச பட்டுச்சேலை' என வாக்குறுதிகளையும் அளித்தார்.
தி.மு.க., அரசை கடுமையாக சாடிய பழனிசாமி, வி.சி., தலைவர் திருமாவளவன், இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன் ஆகியோரையும் விமர்சித்தார். அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.
பழனிசாமியின் பிரசார பயணத்தில், இடையில் சில நாட்கள் தவிர, 34 நாட்களில், 100 சட்டசபை தொகுதிகளில், 10,000 கி.மீ., பயணம் செய்து உள்ளார்.
இதில், 52 லட்சம் மக்கள் பங்கேற்றதாக அ.தி.மு.க., தலைமை தெரிவித்துள்ளது. தி.மு.க., வலுவாக உள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மக்கள் அதிகளவில் கூடினர்.

மேலும்
-
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் நன்கொடை
-
குண்டும் குழியுமான சாலைக்கு சுங்க கட்டணம் வசூலிக்க தடை
-
டில்லியில் பள்ளிகளுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: இன்றும் 5 பள்ளிகளில் சோதனை
-
3 பேருக்கு எஸ்.பி.,யாக பதவி உயர்வு
-
மாநில பணியாளர் தேர்வு முகமை அமைக்க... அரசாணை வெளியீடு; இளைஞர்கள் நீண்ட நாள் ஏக்கத்திற்கு விடிவு
-
அமெரிக்க அரசின் சிடிசி நிறுவன ஊழியர்கள் 600 பேர் பணிநீக்கம்