'டி.ஜி.பி., பதவியில் சாதகமானவரை நியமிக்க தி.மு.க., அரசு முயற்சி': பழனிசாமி

ராணிப்பேட்டை: ''டி.ஜி.பி., பதவிக்கு பட்டியல் அனுப்ப முடியாமல் தி.மு.க., அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது; சாதகமானவரை டி.ஜி.பி.,யாக்க முயற்சிக்கிறது,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த ஏழு மாதத்தில், 850 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 18 நாளில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 63 கொலைகள் நடந்துள்ளன. தமிழகத்தை பொம்மை முதல்வர் ஆள்வதால், சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தி.மு.க., அரசின் நிர்வாகக் கோளாறால், கொலைகள் நிறைந்த மாநிலமாகி விட்டது.
தற்போதைய டி.ஜி.பி., வரும் 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய, மூன்று மாதத்துக்கு முன்பே, மத்திய அரசுக்கு பட்டியலை அனுப்ப வேண்டும்.
மத்திய அரசு மூவரை தேர்வு செய்து, மாநில அரசுக்கு அனுப்பும். அதில், ஒருவரை டி.ஜி.பி.,யாக நியமிக்க வேண்டும். ஆனால், இன்னும் பட்டியலை அனுப்பாமல் தி.மு.க., அரசு தடுமாறிக் கொண்டுள்ளது.
அவர்களுக்கு சாதகமானவரை நியமிக்க முயற்சிக்கின்றனர் என்ற சந்தேகம் எழுகிறது. டி.ஜி.பி., பதவி என்பது முக்கியமான பொறுப்பு.
ஏற்கனவே சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், காவல் துறைக்கு தலைமை இல்லாவிட்டால் யார் கவனிப்பது?
அ.தி.மு.க.,வை பொறுத்தவரை கூட்டணி என்பது, சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தலுக்கு அமைப்பது; கொள்கை என்பது நிலையானது.
மக்கள் விரோத, ஊழல் நிறைந்த தி.மு.க., ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் அ.தி.மு.க., - -பா.ஜ., இரு கட்சிகளுக்கும் ஒரே நிலைப்பாடு இருப்பதால், கூட்டணி அமைத்திருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.



மேலும்
-
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் நன்கொடை
-
குண்டும் குழியுமான சாலைக்கு சுங்க கட்டணம் வசூலிக்க தடை
-
டில்லியில் பள்ளிகளுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: இன்றும் 5 பள்ளிகளில் சோதனை
-
3 பேருக்கு எஸ்.பி.,யாக பதவி உயர்வு
-
மாநில பணியாளர் தேர்வு முகமை அமைக்க... அரசாணை வெளியீடு; இளைஞர்கள் நீண்ட நாள் ஏக்கத்திற்கு விடிவு
-
அமெரிக்க அரசின் சிடிசி நிறுவன ஊழியர்கள் 600 பேர் பணிநீக்கம்