ஹிந்துக்களின் உணர்வுபூர்வ விஷயத்தில் துஷ்ட சக்திகள் விளையாட்டு; தர்மஸ்தலா விவகாரத்தில் கண்ணுக்கு தெரியாத கைகள்

8


ஹிந்து சமூகம் என்பது இந்தியாவை மையமாக கொண்ட மதம் மற்றும் கலாசாரமாகும். ஹிந்து சமூக வரலாறு இன்று, நேற்று தோன்றியது இல்லை. சிந்து சமவெளி நாகரிகம், வேத காலத்தில் இருந்தே உள்ளது. ஹிந்து மதம், அதன் நம்பிக்கை, நடைமுறைகள் இந்தியாவில் வேரூன்றி உள்ளது.

சனாதனம் ஹிந்து மதத்தை காப்பாற்றவும், மதத்தின் மீதான நம்பிக்கையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும், நம் நாடு முழுவதிலும் உள்ள ஹிந்து கோவில்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஹிந்து கோவில்கள் வெறும் வழிபாட்டு தலங்களாக மட்டும் இல்லாமல், சனாதனத்தை வளர்க்கும் மையங்களாகவும், மனிதர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும் இடங்களாகவும் திகழ்கின்றன.

நம் நாட்டின் ஆன்மிக பரப்புரையால், வெளிநாட்டினர் கூட தங்கள் மதங்களை விட்டுவிட்டு, ஹிந்து மதத்திற்கு மாறும் நிகழ்வுகளும் நடக்கின்றன. நம் நாட்டில் உள்ள முக்கிய கோவில்கள், மடங்கள், பக்தர்களின் வாழ்க்கையை மேம்படுத்த நிறைய உதவிகளை செய்கின்றன.

துஷ்ட சக்தி கோவில்கள், மடங்கள் செய்யும் சேவைகள் ஏனோ, ஹிந்து மதத்தை வெறுக்கும் துஷ்ட சக்திகள் கண்களை உறுத்துகின்றன; ஏதாவது செய்து, ஹிந்துக்கள், கோவில்கள், மடங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டும் என்று நினைக்கின்றன.

இதற்காக ஒரு கும்பல் நாடு முழுதும் இயங்குகிறது. ஏழ்மை நிலையில் இருக்கும் ஹிந்துக்களை கண்டறிந்து, 'உங்கள் கடவுள் உங்களுக்கு என்ன தருகிறார்; எங்கள் பக்கம் வந்து விடுங்கள். எங்கள் கடவுள் உங்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்குவார்' என்று கூறி ஆசை காட்டுகிறது; பணம், பொருட்களை கொடுத்து மக்களின் மனநிலையை மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறது.

ஹிந்து மதத்திலிருந்து மதம் மாறியவர்களை தங்கள் சுயலாபத்திற்காக, அந்த கும்பல் அதிகம் பயன்படுத்தி கொள்கிறது. இக்கும்பலிடம் சிக்கி கொள்ளும் ஹிந்துக்களும் எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் தவிக்கின்றனர். துஷ்ட சக்திகளிடம் இருந்து ஹிந்துக்களை காப்பாற்ற, நம் நாட்டில் உள்ள ஹிந்து அமைப்புகள் வாரத்தில் 24 மணி நேரமும் தீவிரமாக வேலை செய்கின்றன. சமீபகாலங்களில் மத மாற்றம் குறைந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த துஷ்ட சக்திகள், தங்கள் பார்வையை கோவில்கள் மீது திருப்பி உள்ளன.

போராட்டம் ஹிந்துக்கள் தங்கள் சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்ள செல்லும் கோவில்கள் மீதே அவதுாறு பரப்பினால், ஹிந்து மதத்தின் மீது வெறுப்பு ஏற்படும். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்று அந்த சக்திகள் கணக்கு போடுகின்றன. இதனால், நாட்டில் உள்ள முக்கிய கோவில்கள் மீது, அவதுாறு பரப்பும் பணியை ஒரு கும்பல் செய்து வருகிறது.

இந்த கும்பல், மஹாராஷ்ராவின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள சனி சிங்கனாபூர் சனீஸ்வரர் கோவிலில், பெண்களை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்காதது பற்றி பிரச்னையை எழுப்பியது. இது தொடர்பாக ஹிந்துக்களுக்கு எதிரான அமைப்புகள் போராட்டம் நடத்தின. இது போல கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலிலும் பெண்களை அனுமதிக்க கோரி நிறைய போராட்டங்கள் நடந்தன.

இந்த போராட்டங்களை பின்னால் இருந்து இயக்கிய கும்பல், தற்போது தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோவிலை குறி வைத்துள்ளது.

நடமாடும் கடவுள் கர்நாடகாவின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி தாலுகாவில் உள்ளது தர்மஸ்தலா கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்தில், நேத்ராவதி ஆற்றின் கரையோரம் மஞ்சுநாதா கோவில் அமைந்து உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்ட இந்த கோவில், ஜெயின் சமூகத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. கோவிலின் நிர்வாக அதிகாரியாக உள்ள வீரேந்திர ஹெக்டே, தலைமை பண்பு, பொறுமை, மக்கள் மீது அக்கறை, சமூகத்திற்கு சேவை செய்வது உள்ளிட்ட குணங்களுக்கு பெயர் பெற்றவர்.

சமூகத்திற்கு செய்யும் சேவையால், நம் மத்திய அரசின் இரண்டாவது பெரிய உயரிய விருதான 'பத்ம விபூஷன்' விருதை, 2015ல் பெற்றவர். கர்நாடக அரசின் உயரிய விருதான, 'கர்நாடக ரத்னா' விருதையும், 2009ல் பெற்றவர்.

மஞ்சுநாதா கோவிலுக்கு சென்று, சிவனை தரிசனம் செய்யும் பக்தர்கள், சிவனுக்கு அடுத்தபடியாக வீரேந்திர ஹெக்டேயை கடவுளாகவே பார்க்கின்றனர். அவரது ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் குவிந்து விடுகின்றனர். தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாகவும் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.

வேதனையின் உச்சம் வீரேந்திர ஹெக்டே மற்றும் மஞ்சுநாதா கோவிலின் வளர்ச்சியை பொறுக்க முடியாத ஒரு கும்பல், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வீரேந்திர ஹெக்டே, மஞ்சுநாதா கோவிலை பற்றி தொடர்ந்து அவதுாறு பரப்புகிறது. 2012ல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கல்லுாரி மாணவி சவுஜன்யா வழக்கில், வீரேந்திர ஹெக்டே குடும்பத்தினரை தொடர்புபடுத்தியது வேதனையின் உச்சம். இப்போது தர்மஸ்தலா மீது புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளது.

'கடந்த 1997 முதல் 2012 வரை, தர்மஸ்தலாவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களை, என் மேற்பார்வையாளர் கூறியதால், பள்ளம் தோண்டி புதைத்தேன்' என்று, முகத்தை கூட வெளியே காட்ட பயந்து, முகமூடி அணிந்தபடி கூறியுள்ளார் மர்ம நபர் ஒருவர்.

'யு - டியூப்' கும்பல் அந்த நபர் கூறிய இடங்களுக்கு அழைத்து சென்று, போலீஸ் அதிகாரிகள் தோண்டிய போது எதுவுமே சிக்கவில்லை. இதிலும் கொடுமை என்னவென்றால், தர்மஸ்தலாவில் உள்ள பாகுபலி சிலை அருகிலும், பள்ளம் தோண்டியது தான். எதுவும் சிக்காத போதும், இந்த வழக்கில் ஏதேதோ நடந்து விட்டது என்பது போன்று, வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்து உள்ளனர்.

முதலில் இவ்விஷயத்தை, ஹிந்து மதம் சாராத ஒரு 'யு - டியூபர்' ஆரம்பித்தார். இதற்கு மேலும் சில யு - டியூபர்களும் ஒத்து ஊதினர்; தாங்கள் தான் பெரிய அறிவாளி போன்று நடந்து கொண்டனர்.

தர்மஸ்தலா வழக்கில் உண் மை தெரிய வேண்டும் என்று, கர்நாடகாவில் உள்ள மக்கள் கூட போராடவில்லை. கேரளாவில் சில பகுதியில், ஒரு சமூகத்தினர் தர்மஸ்தலா வழக்கிற்கு எதிராக போராடினர்.

காங்கிரஸ் எம்.பி., தர்மஸ்தலாவில் 20க்கும் மேற்பட்ட பள்ளங்கள் தோண்டியும், எதுவுமே கிடைக்கவில்லை. புகார் அளித்தவரும், பிறழ் சாட்சியாக மாறி இருப்பதாக தெரிகிறது. சென்னையில் இருந்து என்னை ஒரு கும்பல் அழைத்து வந்து, இப்படித்தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தியாகவும், எஸ்.ஐ.டி., முன் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தர்மஸ்தலாவில் வழக்கு தொடர்பாக புகார்தாரர், போலீசில் புகார் அளித்த பின், முதல்வர் சித்தராமையாவை, உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி கோபால கவுடா தலைமையில், ஒரு குழு சந்தித்தது. எஸ்.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று, முதன்முதலில் வற்புறுத்தியவர்களும் அவர்கள் தான். தற்போது தமிழக காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் பெயரும் அடிபட்டு உள்ளது.

தக்க பாடம் தர்மஸ்தலா கோவில், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது. இந்த மாவட்டம், கர்நாடக - கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. கல்வி அறிவுக்கு எந்த அளவுக்கு பெயர் பெற்றதோ, அதே அளவுக்கு மத கலவரத்திற்கும் தட்சிண கன்னடா பெயர் பெற்றது. அங்கு, இரு சமூகத்தினர் இடையில் அடிக்கடி பிரச்னை நடக்கிறது. ஒரு சமூகத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கேரளாவின் இருந்து நிறைய பேர் வருகின்றனர்.

மஞ்சுநாதா கோவிலுக்கு உலகளவில் பக்தர்கள் இருப்பதை, ஒரு சமூகம் விரும்பவில்லை. அந்த பெயரை கெடுக்கவே இப்போது சதி நடந்து வருகிறது. கோவிலுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைப்பதுடன், கோவிலையும், அதை சுற்றியுள்ள பகுதிகளையும் அபகரித்து விடலாம் என்பதும், கும்பலின் திட்டமாக கூட இருக்கலாம்.

இந்த சதிக்காக வெளிநாடுகளில் இருந்து நிதி உதவியும் செய்யப்படுவதாகவும் தகவல்.

கோவிலில் சிலை தானே உள்ளது. அந்த சிலை நம்மை என்ன செய்து விடும் என்று சதி கும்பல் துாண்டி விடுகிறது. இத்தகையோருக்கு ஒரு நாள் தர்மஸ்தலா மஞ்சுநாதர் பாடம் புகட்டுவது உறுதி.


- நமது நிருபர் -

Advertisement