நெல் கொள்முதல் பிரச்னைகளுக்கு, விவசாயிகளுக்காக முதன்முறையாக... ஆக.28ல் தனி கூட்டம்

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் நெல் கொள்முதலில் முறைகேடு தொடர்பாக நிறைய விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஆக. 28 ல் வேளாண் இணை இயக்குநர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலருடன் விவசாயிகளுக்காக தனிக்கூட்டம் நடத்தப்படும் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்தார். கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் முருகேசன், துணை இயக்குநர் சாந்தி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவப்பிரபாகரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர் வாஞ்சிநாதன் கலந்து கொண்டனர். சென்ற மாத மனுக்கள் வாசிக்கும் முறையுடன் கூட்டம் தொடங்கியது.
மனுக்களாவன அலங்காநல்லுாரில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைக்க வேண்டும். கொட்டக்குடியில் குடிநீர் குழாய் அமைப்பது, முதல் போகத்திற்கு தண்ணீர் திறப்பது, திருமங்கலம் பிரதான கால்வாயின் 40வது பிரிவு கால்வாய் சேதம் அடைந்தது என விவசாயிகளின் சென்ற மாத மனுக்களுக்கான தீர்வுகள் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து நெல் கொள்முதல் மையத்தில் மூடைக்கு ரூ.65 வீதம் கமிஷன் பெறுவதாகவும் மூடையின் எடை 40.6 கிலோ என்பதற்கு பதிலாக 43 கிலோ அளவுக்கு நெல்லை பிடித்து ஏமாற்றுவதாக அனைத்து வட்டார விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மேலும் உசிலம்பட்டி 58 ம் கால்வாய் திட்டத்தின் கீழ் வைகை தண்ணீரை விட வேண்டும் என உசிலம்பட்டி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர். இருபோகத் தண்ணீருக்கு பிறகு தான் உங்களுக்கு என சில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க, மேலுார் விவசாயிகள் எங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று கூச்சலிட்டனர்.
கலெக்டர் பிரவீன்குமார் பேசியதாவது: இந்த பிரச்னைகளுக்கு மட்டும் தீர்வு காணும் வகையில் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், வேளாண் இணை இயக்குநர் தலைமையில் ஆக. 28 ல் தனியாக கூட்டம் நடத்தப்படும். அதில் நெல்கொள்முதல் மையப் பிரச்னைகளை மட்டும் விவசாயிகள் தெரிவிக்கலாம். சென்ற மாதம் பெறப்பட்ட 19 மனுக்கள் நிலுவையில் உள்ளன. பதில் பெற வேண்டியுள்ளது. மதுரை கிழக்கு பகுதி கண்மாய் ஆக்கிரமிப்பு பிரச்னையில் புகார் கொடுத்தவருக்கு மிரட்டல் வருவதாக புகார்தாரர் தெரிவித்துள்ளார். புகார் கொடுத்தவர்களின் ரகசியங்களை காக்க வேண்டியது தாசில்தாரர்களின் வேலை. மதுரை கிழக்கு தாசில்தார் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிலருக்கு எஸ்.எம்.எஸ்., வருவதில்லை என புகார் தெரிவித்துள்ளதால் வீடுகளில் மின்கணக்கீடு எடுக்கும் போது நுகர்வோரின் அட்டையில் கண்டிப்பாக கணக்கீட்டை எழுத வேண்டும். மேலுார், திருமங்கலம் முதல் போகத்திற்கான பாசனத் தண்ணீர் செப். 15 ல் திறக்கப்படும். மதுரையில் 56 இடங்களில் கல் குவாரிகள் செயல்படுகிறது. இதில் 11 இடங்கள் 'ட்ரோன்' மூலம் எந்தளவு கற்கள் எடுக்கப்படுகிறது என அளவிடப்பட்டுள்ளது. மீதியுள்ள 45 குவாரிகளில் அளவெடுக்க கனிமவளத்துறை துணை இயக்குநர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
ஒவ்வொரு விவசாயியின் மனுவுக்கும் வேளாண் அதிகாரி பதில் வாசிக்கும் போது, மற்ற விவசாயிகள் பேசிக் கொண்டே இருந்தனர். பொங்கியெழுந்த ஒரு விவசாயி, 'நம் பிரச்னைகளை சொல்லத் தான் இந்த கூட்டம் நடக்கிறது. மற்றவர்களுக்கு என்ன சொல்கிறார் என்பதை யாருமே கேட்பதில்லை'என்று பொருமினார்.
மேலும்
-
கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்
-
ஏமாற்றுக்காரர்... பொய்யர்... திமிர் பிடித்தவர்! தர்மஸ்தலா புகார்தாரரின் முதல் மனைவி 'திடுக்'
-
வாடகை வீடுகள், பேரிடரை சமாளிக்கும் கட்டடங்களுக்கு முன்னுரிமை அவசியம்: ரியல் எஸ்டேட் கவுன்சில் வலியுறுத்தல்
-
இரண்டாவது மாநாட்டிலும் நாற்காலிகள் சேதம்
-
தினமலர் மெகா ஷாப்பிங் திருவிழா ஆக.,29ல் துவக்கம்
-
த.வெ.க., மாநாடு பாக்ஸ்