வாடகை வீடுகள், பேரிடரை சமாளிக்கும் கட்டடங்களுக்கு முன்னுரிமை அவசியம்: ரியல் எஸ்டேட் கவுன்சில் வலியுறுத்தல்

2


சென்னை: 'தமிழகத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சிறு நகரங்களில் வாடகை குடியிருப்புகள், பேரிடரை சமாளிக்கும் கட்டடங்கள் கட்டுவதை அதிகரிக்க வேண்டும்' என, தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தால், தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சில் 1998ல் ஏற்படுத்தப்பட்டது. இந்த கவுன்சில் சார்பில், ஏழாவது தேசிய மாநாடு, வரும் 29, 30ம் தேதிகளில் புதுடில்லியில் நடக்க உள்ளது.

வளர்ச்சி பாதை இது குறித்து விளக்கும் வகையில், அதன் தமிழக பிரிவு தலைவர் ஞானசேகர் தேவதாசன் கூறியதாவது:

நாட்டிலேயே தமிழகத்தில், ரியல் எஸ்டேட் துறை ஆக்கப்பூர்வமான வளர்ச்சி பாதையில் செல்கிறது. சென்னை, கோவை நகரங்களில் மட்டுமல்லாது, பல்வேறு நகரங்களிலும் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் குடியிருப்பு கள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான ரியல் எஸ்டேட் வளர்ச்சி மேலும் அதிகரிக்க, உடனடி கட்டட அனுமதி, குறைந்த விலை வீடுகள் கிடைக்கச் செய்வது போன்ற நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிறு நகரங்களில், வாடகை வீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். பேரிடரை சமாளித்து நிற்கும் வகையிலான கட்டடங்கள் கட்டுவதற்கு, அரசும், கட்டுமான நிறுவனங்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இத்துடன், நகர்ப்புற மண்டலங்களை விரிவாக்கம் செய்யும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மையப்புள்ளி தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சில் தேசிய தலைவர் நிரஞ்சன் ஹிரா நந்தானி கூறியதாவது:

நாட்டில் பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக நகர்ப்புற திட்டமிடல் அமைந்துள்ளது. இதில் கட்டுமானத் துறை பெரும் பங்காற்றுகிறது. பசுமை கட்டுமான பொருட்களை பயன்படுத்துதல், கரியமில வாயு உமிழ்வு விஷயங்களில், கட்டுமானத் துறையின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement